தேடுதல்

Vatican News
பேராயர் ஈவான் யூர்க்கோவிச் பேராயர் ஈவான் யூர்க்கோவிச்  

முன்னேற்றம் - திருப்பீடம் வழங்கும் இலக்கணம்

ஒவ்வொருவரும், மனித மாண்பில் முழு வளர்ச்சி பெறுவதற்குத் தகுந்த சூழலை உருவாக்குவதே முன்னேற்றத்தின் முழுமையான வழிமுறை - பேராயர் யூர்க்கோவிச்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

முன்னேற்றம் என்பதன் இலக்கணம், அதன் உயிர்நாடியாக விளங்கும் மனிதர்களை மையப்படுத்தியதாக அமையவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.அவை நடத்திய ஒரு கூட்டத்தில் கூறினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் ஈவான் யூர்க்கோவிச் அவர்கள், "முன்னேற்றம் அடைவதற்கு உரிமை: பன்னாட்டு சட்ட வழிமுறைகள்" என்ற தலைப்பில், மே 1ம் தேதி நடந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொருவரும், தனி மனிதராகவும், தங்கள் சமுதாயத்தின் உறுப்பினராகவும், மனித மாண்பில் முழு வளர்ச்சி பெறுவதற்குத் தகுந்த சூழலை உருவாக்குவதே முன்னேற்றத்தின் முழுமையான வழிமுறை என்று பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

மனிதர்கள் தங்களை சூழ்ந்திருக்கும் இயற்கையை மதித்து, அதன் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்துவது இன்றைய உலகின் மிக அவசரமானத் தேவை என்பதையும், பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

'புவி வெப்பமடைதலைத் தடுக்கவும், உலகின் வறுமையை அகற்றவும் நாம் அனைவரும் இணைந்து, பொறுமையான, நீதி நிறைந்த உரையாடலை மேற்கொள்வது அவசியம்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ள சொற்களை, பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், தன் உரையில் நினைவுறுத்தினார்.

02 May 2019, 15:18