தேடுதல்

Vatican News
இலங்கை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழகத்தில் கண்டன ஊர்வலம் இலங்கை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழகத்தில் கண்டன ஊர்வலம்  (AFP or licensors)

வழிபாடுகளின்போது நடத்தப்படும் தாக்குதல்கள் வெட்கத்துக்குரியன

பயங்கரவாதத் தாக்குதல்கள், எப்போதும், எல்லா இடங்களிலும் கண்டனத்துக்குரியவை. இவை, அமைதி இயலக்கூடியதே என்ற எண்ணத்திற்கு எதிரான கோழைத்தனமான தாக்குதல்கள்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறு காலையில், இலங்கையில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்கு, திருப்பீடத்தின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும், மீண்டும் தெரிவிப்பதாக, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் கூறியுள்ளார்.

மே 3, இவ்வெள்ளியன்று, நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், ஐ.நா. பொது அவைத் தலைவரின் அலுவலகம் மற்றும், ஐ.நா.வின் இலங்கைப் பணியகம் இணைந்து, இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக நடத்திய நிகழ்வில் உரையாற்றினார், பேராயர் அவுசா.

பயங்கரவாதத் தாக்குதல்கள் எப்போதும், எல்லா இடங்களிலும் கண்டனத்துக்குரியவை, ஆயினும், வழிபாடுகளின்போது, மத நம்பிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், மிகவும் வெட்கத்துக்குரியன மற்றும், அமைதி இயலக்கூடியதே என்ற எண்ணத்திற்கு  எதிரான கோழைத்தனமான தாக்குதல் என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், இதனாலே உலகம் முழுவதும் கண்ணீர் சிந்துகிறது என்று உரைத்தார்.

யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு அதிகரித்து வருவதற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் உலகளாவிய சமுதாயம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும், பேராயர் அவுசா. 

தாக்குதல்கள் நடைபெற்ற அன்றே, தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், ஆழமான மனித மற்றும் ஆன்மீக நெருக்கம் நிறைந்த அவரின் வார்த்தைகளாலேயே, மீண்டும் எனது செபங்களைத் தெரிவிக்கிறேன் என்று, பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், குறைந்தது 16 நாடுகளைச் சார்ந்த 42 பேரும், 211 இலங்கை மக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும், பேராயர் அவுசா அவர்கள் குறிப்பிட்டார்.

04 May 2019, 14:59