தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் தென் சூடான் அரசுத் தலைவர் Salva Kiir Mayardit திருத்தந்தையுடன் தென் சூடான் அரசுத் தலைவர் Salva Kiir Mayardit  (ANSA)

ஒன்றிணைப்பவற்றை நாடுங்கள், பிரிப்பனவற்றை வெற்றி கொள்ளுங்கள்

தென் சூடான் நாட்டு அரசு அதிகாரிகளும், கிறிஸ்தவத் தலைவர்களும் இணைந்து திருப்பீடத்தில் ஆன்மீக தியானம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -  வத்திக்கான் செய்திகள்

'வருங்காலம் குறித்த நம்பிக்கையையும், தொடர்ந்து நடைபோடுவதற்கான துணிச்சலையும் இறைவன் நமக்கு எப்போதும் வழங்குவாராக' என இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தென் சூடான் நாட்டு அரசுத் தலைவர் மற்றும் கிறிஸ்தவத் தலைவர்களை அழைத்து திருப்பீடத்தில் ஆன்மீக தியானம் ஒன்றை ஏற்பாடுச் செய்யும் கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களின் பரிந்துரையை திருத்தந்தை ஏற்றுள்ளதாக, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இச்செவ்வாயன்று அறிவித்தது.

ஏப்ரல் மாதம் 1௦ மற்றும் 11 தேதிகளில், அதாவது, இப்புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாள்கள் இடம்பெறும் இந்த ஆன்மீக தியானத்தில், தென் சூடான் அரசுத் தலைவர் Salva Kiir Mayardit அவர்களுடன், அந்நாட்டின் 4 துணை அரசுத்தலைவர்களும், தென் சூடான் கிறிஸ்தவ அவையின் அங்கத்தினர்களும் பங்குபெறுகின்றனர்.

உகாண்டாவில் Gulu  பேராயர் John Baptist Odama அவர்களும், ஆப்ரிக்க துறவு சபை அதிபர்கள் அவையின் தலைவர், இயேசு சபை அருள்பணியாளர் Agbonkhianmeghe Orobator அவர்களும், இத்தியானத்தை வழிநடத்த உள்ளனர்.

இத்தியானத்தின் இறுதி நாளான வியாழன் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்கு உரை வழங்குவதுடன், 'ஒன்றிணைப்பவைகளை நாடுங்கள், பிரிப்பவைகளை வெற்றி கொள்ளுங்கள்' என்ற செய்தியுடன் திருத்தந்தை, ஆங்கிலிக்கன் பேராயர் வெல்பி, ஸ்காட்லாந்தின் Presbyterian கிறிஸ்தவ சபை முன்னாள் தலைவர், போதகர் John Chalmers ஆகியோர் கையெழுத்திட்ட விவிலியப் பிரதிகள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும்.

09 April 2019, 16:46