தேடுதல்

Vatican News
பேராயர் இவான் யுர்கோவிச் பேராயர் இவான் யுர்கோவிச்  

மனித மாண்பை மதிப்பது, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு அவசியம்

வளர்ச்சிக்குரிய திட்டங்களில், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் கிடைப்பதற்கு வழியமைக்கப்பட வேண்டும் - பேராயர் யுர்கோவிச்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனிதரின் வளர்ச்சி, பொருளாதாரம் அல்லது வல்லுனர்கள் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல, அது ஒவ்வொரு மனிதரும் சுதந்திரமாகவும், கடமையுணர்வுடனும் ஆற்றப்படுவதற்கு விடுக்கப்படும் அழைப்பாகும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஜெனீவாவில் ஏப்ரல் 29, இத்திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள், “வளர்ச்சியடைவதற்கு உரிமை” என்ற தலைப்பில் நடைபெற்ற, ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றியவேளை, மனித உரிமையாக, வளர்ச்சியடைவதற்குரிய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

வளர்ச்சிக்குரிய திட்டங்களில், மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் கிடைப்பதற்கு வழியமைக்கப்பட வேண்டும் என்றும் உரையாற்றிய, பேராயர் யுர்கோவிச் அவர்கள், வளர்ச்சியடைவது தனது கடமை என, ஒவ்வொரு மனிதரும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மனித மாண்பை மதிப்பது, நீடித்த மற்றும் நிலையான ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கு, மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகும் என்று வலியுறுத்திய பேராயர் யுர்கோவிச் அவர்கள், 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவதற்கு நாம் விரும்பினால், இப்பூமி மற்றும் ஏழைகளின் அழுகுரலுக்குச் செவிமடுக்க, அதிகமதிகமாக உலகினர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

30 April 2019, 15:43