தேடுதல்

Vatican News
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி  (ANSA)

பாலஸ்தீனாவின் அரசியல், பொருளாதார உறுதிநிலைக்கு ஒன்றிப்பு அவசியம்

எருசலேமின் தனித்துவம் மற்றும் அதன் உலகளாவிய தன்மையை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், அங்கு, ஏற்கனவே நலிவடைந்து வாழ்கின்ற மக்களை மட்டுமல்லாமல், மத்திய கிழக்கின் அமைதி மற்றும் நிலையான தன்மையை, மேலும் பாதிக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களால் காணப்படும் நம்பிக்கையற்ற சூழல்களுக்கு மத்தியில், தற்போதைய புதிய பாலஸ்தீன அரசு நம்பிக்கை ஒளியை வழங்குவதாக, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.

பாலஸ்தீன விவகாரம் உட்பட, மத்திய கிழக்குப் பகுதியின் நிலை பற்றி, ஐ.நா. பாதுகாப்பு அவையில், ஏப்ரல் 29, இத்திங்களன்று நடைபெற்ற பொதுவான கலந்துரையாடலில், திருப்பீடத்தின் கருத்துக்களை எடுத்துரைத்த, ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

பாலஸ்தீனாவின், அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியான தன்மைக்கு, ஒன்றிப்பு இன்றியமையாதது என்றும், இதற்கு, பாலஸ்தீனாவின் அண்டை நாடுகள், பாலஸ்தீனாவின் பல்வேறு பிரிவினைக் குழுக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்துமாறு திருப்பீடம் அழைப்பு விடுக்கின்றது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

இந்த முயற்சிகள், பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளும், ஏக்கங்களும் நிறைவேற்றப்படுவதற்கும், நிலையான அமைதி நிலவுவதற்கும், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு கிடைப்பதற்கும் மிகவும் முக்கியமானது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

பாலஸ்தீனப் புலம்பெயர்ந்தவர்கள் நிலை பற்றியும் கவலை தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள், இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வு மிகவும் முக்கியம் என்றும், எருசலேமின் உலகளாவிய தனித்துவம் காக்கப்பட வேண்டும், இது அப்பகுதியின் நிலையான அமைதிக்கு முக்கியம் என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

30 April 2019, 15:45