தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் கர்தினால் Sean Patrick O'Malley திருத்தந்தையுடன் கர்தினால் Sean Patrick O'Malley  

சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் 10வது கூட்டம்

சிறார் பாதுகாப்பு குறித்து திருஅவையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், நம்பிக்கை தருவதாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை குறித்து, இன்னும் நிறைய வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவைப் பணியாளர்கள் சிலரின் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சிறார்களின் நிலை குறித்து கற்றுக்கொள்ளவும், அவர்களுக்குச் செவிமடுத்து, உதவிபுரியவும், பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல சிறார் பாதுகாப்பு திருப்பீட அவை தீர்மானித்துள்ளது.

இத்திருப்பீட அவை, ஏப்ரல் 4ம் தேதி முதல் 7ம் தேதி முடிய, உரோம் நகரில் நடத்திய 10வது நிறையமர்வுக் கூட்டத்தில், பாதிக்கப்பட்டோரின் நேரடி பகிர்வுகளிலிருந்து, உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்தில், ஆப்ரிக்காவின் சஹாராப் பகுதியைச் சேர்ந்த அன்னை ஒருவர், தான் சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளைக் கூறிய சாட்சியத்திற்கு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் செவிமடுத்தனர்.

சிறார் பாதுகாப்பு குறித்த இக்கூட்டத்தை துவக்கிவைத்து உரை வழங்கிய இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Sean Patrick O'Malley அவர்கள், சிறார் பாதுகாப்பு குறித்து திருஅவையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், நம்பிக்கை தருவதாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை குறித்து, இன்னும் நிறைய வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில், அந்தந்த நாடுகளில் ஆலோசனைக்குழுக்கள் அமைத்தல், வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறாமலிருக்க வல்லுனர்களின் உதவியுடன் ஆய்வுகள் நடத்துதல் ஆகியப் பரிந்துரைகள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மேலும், கண்காணிப்பு, செயல்முறைப்படுத்தல் குறித்த விதிகளை உருவாக்குதல், செயல்முறை விதிகளை ஆய்வு செய்தல், போன்ற செயல்பாடுகளுடன், உலக அளவில், கல்விசார் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கும், சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் கூட்டத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

09 April 2019, 16:31