தேடுதல்

Vatican News
Bambino Gesù: Mattarella a cerimonia per 150 anni fondazione Bambino Gesù: Mattarella a cerimonia per 150 anni fondazione   (ANSA)

குழந்தை இயேசு மருத்துவமனையின் 150ம் ஆண்டில் கர்தினால் பரோலின்

உரோம் குழந்தை இயேசு மருத்துவமனை, ஐரோப்பாவில் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாகவும், குழந்தைகள் குறித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாகவும் செயல்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவை, நோயாளிகளுக்கு ஆற்றும் பணிகளை நிறுத்திவிடாது என்றும், மனிதரை மையப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார். 

மார்ச் 19, இச்செவ்வாயன்று, உரோம், புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற, 'குழந்தை இயேசு மருத்துவமனை' துவங்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், “வருங்காலம், சிறாரின் ஒரு கதை - குழந்தை இயேசு மருத்துவமனையின் பணி” என்ற தலைப்பில், இந்நிகழ்வு சிறப்பிக்கப்படுவது பற்றியும் பேசினார்.

இம்மருத்துவமனை 150 ஆண்டுகளாக, சிறார் மீது கவனம் செலுத்தி, பல்வேறு அறிவியல் ஆய்வுகளை நடத்தி, அறிவியல்முறையில் வளர்ந்து வருகின்றது என்றும் பாராட்டிப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்நிகழ்வுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.  

இந்நிகழ்வில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, நலவாழ்வு அமைச்சர் Giulia Grillo, உரோம் மேயர் Virginia Raggi உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு, இம்மருத்துவமனையின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளைப் பாராட்டிப் பேசினர்.

குழந்தை இயேசு மருத்துவமனை

Jacqueline Arabella de Fitz-James Salviati என்ற உயர்குடி பெண்மணி ஒருவரது முயற்சியால், 1869ம் ஆண்டு நிறுவப்பட்ட உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையின் கிளைகள், தற்போது, ஜோர்டான், பாலஸ்தீனா, மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகள் உட்பட, உலகின் 12 நாடுகளில் இயங்கி வருகின்றன.

ஐரோப்பாவில் மிகச் சிறந்த குழந்தைகள் மருத்துவமனையாக விளங்கும், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையின் 150ம் ஆண்டையொட்டி, சிறப்பு தபால் தலை ஒன்று, மார்ச் 19, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது.

19 March 2019, 15:34