தேடுதல்

Vatican News
கொலம்பியா-வெனிசுவேலா எல்லையில் குடியேற்றதாரர்கள் கொலம்பியா-வெனிசுவேலா எல்லையில் குடியேற்றதாரர்கள்  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோர் மாண்புடன் நடத்தப்பட தகுதியுடையவர்கள்

தங்கள் நாடுகளில் வாழவே முடியாது என்ற சூழலில், புலம்பெயரும் மக்கள் மேற்கொள்ளும் பயணம் முழுவதும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயரும் மக்கள் அனைவரும், எவ்விதப் பாகுபாடுகளுமின்றி. மாண்புடன் நடத்தப்படுவதற்கும், அவர்களின் அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுவதற்கும் தகுதியுடையவர்கள் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டமொன்றில் தெரிவித்தார்.

உலகளாவிய புலம்பெயர்வு குறித்து, நியு யார்க்கில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல் கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் நேரடிப் பொதுச் செயலர் அருள்பணி Antoine Camilleri அவர்கள் பிப்ரவரி 28, இவ்வியாழனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

தங்கள் நாடுகளில் வாழவே முடியாது என்ற சூழலில் புலம்பெயரும் மக்கள் மேற்கொள்ளும் பயணம் முழுவதும் பாதுகாப்பு வழங்கப்படுவதற்கும் அம்மக்கள் தகுதியுடையவர்களே என்றுரைத்த அருள்பணி Camilleri அவர்கள், பிறரை வரவேற்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில், புலம்பெயர்வு பற்றிய செய்தியை முதல் முறையாகக் கேட்பவர், இப்பிரச்சனை, எல்லைப்புற பாதுகாப்பின்மை, மனிதாபிமானப் பேரிடர் மற்றும் மனித வர்த்தகத்தோடு ஒத்திருப்பதாக நினைக்கலாம் என்று உரையாற்றிய அருள்பணி Camilleri அவர்கள், புலம்பெயர்வு நிகழ்வு, பெரும்பாலும் வழக்கமாக இடம்பெற்றுவருவது என்ற உண்மை உணரப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மக்களின் புலம்பெயர்வு, ஒரு நல்ல பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது என்றும், பல நவீன நாடுகள், புலம்பெயர்வு குறித்த செய்தியை அரிதாகவே நோக்குகின்றன என்றும், நாம் வாழ்கின்ற நாடுகள் மற்றும் சமுதாயங்களின் வரலாற்றை நோக்கினால், தக்கவிதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் புலம்பெயர்வு, அந்தந்த நாடுகளின் கலாச்சார, பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு உதவியுள்ளது என்பதைத் தெளிவாக உணரலாம் என்றும் உரையாற்றினார், அருள்பணி Antoine Camilleri.

01 March 2019, 15:23