தேடுதல்

இஸ்பெயினில் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட இறைஊழியர்களான ஒன்பது குருத்துவ மாணவர்கள் இஸ்பெயினில் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட இறைஊழியர்களான ஒன்பது குருத்துவ மாணவர்கள் 

திருஅவைக்குத் துன்பம் தராத மறைப்பணியாளர்கள் தேவை

விசுவாசத்திற்காக உயிரைக் கொடுப்பது ஒரு கொடை, இது சிலருக்கே நேரிடுகின்றது, ஆனால், விசுவாசத்தை வாழ்வது, அனைவருக்கும் விடுக்கப்படும் அழைப்பு

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆன்மாக்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கின்ற, திருஅவைக்குத் துன்பம் தராத, மற்றும் இறைமக்களை நிலைகுலையச் செய்யாத, நேர்மை மற்றும், குற்றமற்ற திருஅவைப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று, புனிதர்நிலைக்கு உயர்த்தும் பணியை ஆற்றுகின்ற, திருப்பீட பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு (Angelo Becciu) அவர்கள் மார்ச் 09, இச்சனிக்கிழமையன்று கூறினார்.

இஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப் போரில் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட இறைஊழியர்களான ஒன்பது குருத்துவ மாணவர்களை, மார்ச் 09, இச்சனிக்கிழமை முற்பகலில், அந்நாட்டின் Oviedo நகர் பேராலயத்தில் அருளாளர்கள் என அறிவித்த கர்தினால் பெச்சு அவர்கள், இவ்வாறு கூறினார்.

Oviedo பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் பெச்சு அவர்கள், இந்த மறைசாட்சிகள் போன்று, இன்றைய திருஅவைக்குத் தாராளமனதுடன் பணியாற்றும், குருத்துவ மாணவர்கள், அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் மற்றும் மறைப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று கூறினார். 

விசுவாசத்திற்காக உயிரைக் கொடுப்பது ஒரு கொடை, இது சிலருக்கே நேரிடுகின்றது, ஆனால், விசுவாசத்தை வாழ்வது அனைவருக்கும் விடுக்கப்படும் அழைப்பு என்பதை, இந்த இளம் மறைசாட்சிகள், நம் அனைவருக்கும் கூறுகின்றனர் என்றார், கர்தினால் பெச்சு.

சாதாரண கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த இந்த மறைசாட்சிகள், இரவின் இருளில் சுடர்விட்டவர்கள், விசுவாசிகளின் பாதையில் அவர்கள் தொடர்ந்து சுடர்விட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றும் கர்தினால் மறையுரையாற்றினார்.

ஒன்பது இளம் அருளாளர்கள்

இஸ்பெயினின் Asturias பகுதியைச் சார்ந்த, Angelo, Mariano, Jesus, César Gonzalo, José Maria, Juan José, Manuel, Sixto, Luis ஆகிய ஒன்பது குருத்துவ மாணவர்களும், 1936ம் ஆண்டுக்கும், 1937ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அந்நாட்டின் உள்நாட்டுப் போரின்போது விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டார்கள்.

1934ம் ஆண்டு கோடை விடுமுறையை தனது குடும்பத்துடன் செலவழித்து, Oviedo குருத்துவ கல்லூரிக்குத் திரும்பிய Angel Cuartas Cristóbal, நாட்டில் நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்தும், வீடு திரும்ப மனமில்லாமல், அங்கேயே தங்கி மறைசாட்சியானார். இந்த ஒன்பது மறைசாட்சிகளில் மிகவும் இளையவரான Angel Cuartas Cristóbal அவர்களின் வயது 18. இந்த மறைசாட்சிகள், 18க்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2019, 16:08