தேடுதல்

Vatican News
"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாவது நாளன்று ஜெர்மன் கர்தினால் Reinhard Marx "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாவது நாளன்று ஜெர்மன் கர்தினால் Reinhard Marx 

பாலியல் முறைகேடுகள் குறித்த விசாரணையில், ஒளிவுமறைவற்ற நிலை

சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, திருஅவை நிர்வாகம், முழுமையாகச் செயல்பட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் நடைபெற்றுவரும் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற கூட்டத்தின் மூன்றாவது நாளாகிய பிப்ரவரி 23, இச்சனிக்கிழமை காலை பத்து மணிக்கு,   "நம்பிக்கையாளர்கள் சமுதாயத்தில், ஒளிவு மறைவற்ற நிலை" என்ற தலைப்பில் ஜெர்மன் கர்தினால் Reinhard Marx அவர்கள் உரை வழங்கினார்.

ஜெர்மன் ஆயர் பேரவை தலைவரான, மூன்சென் பேராயர் கர்தினால் Reinhard Marx அவர்கள், சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகள் குறித்த புகார்கள் பற்றி விசாரணை நடத்தி, அம்முறைகேடுகளைத் தடுப்பதில், திருஅவை நிர்வாகத்தில், தீர அலசி ஆராய்வதும்,  ஒளிவுமறைவற்ற தன்மையும் அவசியம் என்றும் கூறினார்.

திருஅவையின் பெயருக்கு இழுக்கு வருவிப்பது, ஒளிவுமறைவற்ற நிலை அல்ல, மாறாக, ஆற்றப்பட்ட பாலியல் முறைகேடுகள், ஒளிவுமறைவற்ற நிலை இல்லாமை, மற்றும் அக்குற்றங்களை மூடிமறைப்பது என்று கர்தினால் Marx அவர்கள் கூறினார்.

சிறியோர்க்கெதிரான பாலியல் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, திருஅவை நிர்வாகம், முழுமையாகச் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட, ஜெர்மன் கர்தினால் Marx அவர்கள், இவ்விவகாரத்தில், உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டார். இந்த முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் கத்தோலிக்கத் திருஅவையில் அழிக்கப்பட்டுள்ளன என்பதையும், கர்தினால்கள், ஆயர்கள், துறவிகள் என ஏறக்குறைய 190 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கூறினார், கர்தினால் Marx.

பொறுப்புணர்வு, ஒருவருக்கொருவர் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வு, ஒளிவுமறைவற்ற நிலை ஆகிய மூன்று தலைப்புகளில், இந்த மூன்று நாள்களும் அமர்வுகள் இடம்பெற்றன.     

மேலும், அருள்பணியாளர்களால் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளான 14 பேரை, கர்தினால் Reinhard Marx அவர்கள் சந்தித்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

இச்சனிக்கிழமை மாலை அமர்வில், "அனைத்து மக்களோடும் தொடர்பு" என்ற தலைப்பில் முனைவர் Valentina Alazraki அவர்களின் உரையும், குழு விவாதங்களும் நடைபெறுகின்றன.

23 February 2019, 15:05