தேடுதல்

மால்ட்டா பேராயர் Charles J. Scicluna மால்ட்டா பேராயர் Charles J. Scicluna  

வத்திக்கான் கூட்டம், இறைவனால் வழிநடத்தப்படுகிறது

வத்திக்கானில் நடைபெறும் கூட்டம், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்றும், சாதனை என்றும் எண்ணுவது தவறு, இது இறைவனால் வழிநடத்தப்படுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'சிறியோரின் பாதுகாப்பு' குறித்து, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் கூட்டம், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி என்றும், சாதனை என்றும் எண்ணுவது தவறு, இது இறைவனால் வழிநடத்தப்படுகிறது என்ற எண்ணத்துடன் இதில் கலந்துகொள்வதே சிறந்த மனநிலை என்று, இக்கூட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

பிப்ரவரி 21, இவ்வியாழனன்று துவங்கவிருக்கும் முக்கியமான கூட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் உறுப்பினரான மால்ட்டா பேராயர் Charles J. Scicluna அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், இந்தக் கூட்டத்திற்கு பின்புலமாக செபம் ஒரு முக்கிய பங்காற்றவேண்டும் என்று கூறினார்.

திருஅவையில் நிகழ்ந்துள்ள இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, திருஅவையின் தலைமைப் பொறுப்பில் இருப்போர் மட்டும் செயலாற்றுவது போதாது, இறை மக்கள் அனைவருமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேராயர் Scicluna அவர்கள், கூறினார்.

பாலியல் வழியில் உருவான கொடுமைகளும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை தன் பேட்டியில் குறிப்பிட்ட பேராயர் Scicluna அவர்கள், இது, இன்றைய திருஅவை சந்திக்கும் பெரும் போராட்டம் என்று எடுத்துரைத்தார்.

இந்த மூன்று நாள் சந்திப்பு, திருஅவை மீது நம்பிக்கையை உடனே உருவாக்கப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்திய பேராயர் Scicluna அவர்கள், இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அனைவருமே, உறுதியுடன், தாராள மனதுடன், பரிவுடன் செயல்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்திக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2019, 15:48