தேடுதல்

COP24 என்ற காலநிலை உலக உச்சி மாநாடு COP24 என்ற காலநிலை உலக உச்சி மாநாடு 

பூமிக்கோளத்தின் அழுகுரலுக்கு எப்போது விடைகள் கிடைக்கும்

COP24 என்ற காலநிலை உலக உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட திருப்பீட பிரதிநிதிகள், தங்கள் இறுதி அறிக்கையை, டிசம்பர் 19ம் தேதி வெளியிட்டுள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தப் பூமிக்கோளத்தின் அழுகுரலுக்கும், மக்களின் அழுகுரலுக்கும் எப்போது விடைகள் கிடைக்கும் என்ற கேள்வியை, திருப்பீடம், COP24 என்ற காலநிலை உலக உச்சி மாநாட்டின் இறுதி அமர்வுகளில் எழுப்பியது.

டிசம்பர் 2ம் தேதி முதல், 15ம் தேதி முடிய போலந்து நாட்டின் காத்தோவித்ஸ (Katowice) என்ற நகரில் நடைபெற்ற காலநிலை உலக உச்சி மாநாட்டில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற குழு, தன் இறுதி அறிக்கையை, டிசம்பர் 19, இப்புதனன்று வெளியிட்டது.

இந்த மாநாட்டில் கூடியிருந்த உலகத் தலைவர்கள், தங்கள் சொந்த ஆதாயங்கள், தங்கள் நாட்டின் ஆதாயங்கள் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி, உலகத்தின் பொதுவான நலனை முன்வைத்து முடிவுகள் எடுக்க தயங்கினர் என்று கூறும் இவ்வறிக்கை, இறுதி சில நாள்களில், இத்தலைவர்கள், பாரிஸ் மாநகரில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த ஓரளவு முன்வந்துள்ளனர் என்று கூறுகிறது.

தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ள முடிவுகளில், மனித உரிமைகள் பிரச்னைக்கும்,  சுற்றுச்சூழல் மாற்றங்களால், இன்றைய உலகை அதிகம் பாதிக்கும் புலம்பெயர்வு என்ற பிரச்சனைக்கும் தகுதியான முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும், திருப்பீடத்தின் இறுதி அறிக்கை கூறுகிறது.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில் COP24 மாநாட்டில் பங்கேற்ற திருப்பீடப் பிரதிநிதிகள், மனிதர்களின் அடிப்படையான மாண்பை உயர்த்திப்பிடித்தல், வறுமையை ஒழித்தல், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் ஆகிய அம்சங்கள், காலநிலை மாற்றங்களோடு தொடர்புள்ளவை என்பதை வலியுறுத்தினர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி எரிபொருள் பயன்பாட்டையும், கார்பன் அளவையும் குறைத்தல், நாடுகளுக்கிடையே வெளிப்படையான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுதல் ஆகிய பரிந்துரைகளை, திருப்பீடக் குழு COP24 காலநிலை உச்சி மாநாட்டில் முன் மொழிந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:49