தேடுதல்

Vatican News
ஐ.நா. அவை அமர்வில் உரையாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா. அவை அமர்வில் உரையாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா  

மனித உரிமைகளை காப்பதில் மத நிறுவனங்களின் பங்கு

மதத்தின் பெயரால் வெறுப்பைத் தூண்டிவரும் தீமையை எதிர்த்து நிற்க மத நிறுவனங்கள் முன்வர வேண்டும் – ஐ.நா. பிரதிநிதி பேராயர் ஆவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உரிமைகளைக் காப்பதற்கும், மோதல்களைத் தவிர்ப்பதற்கும் மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களின் பங்கு அவசியம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், டிசம்பர் 11, இச்செவ்வாயன்று, "மனித உரிமைகளும், மோதல்களை மாற்றுதலும்: மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

'அமைதிக்காக தலைவர்கள்' என்ற தலைப்பில் Rondine Youth என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் இத்திங்களன்றும், மனித உரிமைகளை மையப்படுத்திய நிகழ்வில் இச்செவ்வாயன்றும் பங்கேற்பதற்கு, திருப்பீடம் அழைக்கப்பட்டுள்ளதை ஒரு பெரும் வாய்ப்பாக தான் கருதுவதாக, பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

உலகில் பிறக்கும் அனைத்து மனிதர்களும், எவ்வித பாகுபாடும் இன்றி, இறைவனால் அன்புகூரப்படுகின்றனர் என்பதை, மதங்களே நமக்குச் சொல்லித் தருகின்றன என்பதால், மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களே, மனிதர்களுக்குரிய அடிப்படை மாண்பை வழங்குகின்றன என்று, பேராயர் அவுசா அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

மனித சமுதாயம் துண்டுகளாக்கப்பட்டு வருவதே, நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படை காரணம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, ஐ.நா. அவையில் வழங்கிய உரையில் கூறியதை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

உலகில் நிலவும் அனைத்து தீமைகளையும் எதிர்க்கும் சக்தி மத நம்பிக்கை கொண்ட நிறுவனங்களுக்கு உள்ளது என்பதை எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், மதத்தின் பெயரால் வெறுப்பைத் தூண்டிவரும் தீமையையும் எதிர்த்து நிற்க மத நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

12 December 2018, 15:41