தேடுதல்

1948ம் ஆண்டு பாரிஸ் மாநகரில் கூடிய ஐ.நா. அவை கூட்டம் 1948ம் ஆண்டு பாரிஸ் மாநகரில் கூடிய ஐ.நா. அவை கூட்டம் 

உலக மனித உரிமைகள் அறிக்கையின் 70ம் ஆண்டு

இன்றைய உலகில், மனிதரின் பல்வேறு அடிப்படை உரிமைகள் காக்கப்படவில்லை மற்றும், சில உரிமைகளுக்கு அளிக்கப்படும் விளக்கங்களும் மாறியுள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு, மனிதரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதற்கு, மனித சமுதாயத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. வில் உரையாற்றினார்.

“உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டில்: அவற்றின் தோற்றம், சாதனைகள், மீறல்கள்” என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில், உரையாற்றிய, பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இந்த அறிக்கை குறித்து திருத்தந்தையர் வெளியிட்டுள்ள கூற்றுக்களையும் மேற்கோள் காட்டினார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை, நம் காலத்தில், மனித மனசாட்சியின் உயரிய வெளிப்பாடுகளில் ஒன்றாகவும், மனிதரின் உரிமைகளைக் காப்பதற்குத் தூண்டுதல் தருகின்ற அடிப்படை ஏடாகவும் உள்ளது என, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதை, தன் உரையில் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.  

மேலும், உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு மற்றும், வியன்னா அறிக்கையின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 10, வருகிற திங்களன்று, பன்னாட்டு கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

டிசம்பர் 10, 11 ஆகிய இரு நாள்களில் நடைபெறவுள்ள இக்கூட்டம், தற்கால உலகில் மனித உரிமைகள் அவை கடைப்பிடிக்கப்படும் விதம் பற்றி கலந்துரையாடவுள்ளது

1948ம் ஆண்டு டிசம்பர் பத்தாம் நாள், உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் எழுபதாம் ஆண்டு நிறைவு, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 10ல், உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2018, 15:36