தேடுதல்

Vatican News
ROACO அமைப்பினருடன் திருத்தந்தை ROACO அமைப்பினருடன் திருத்தந்தை  (ANSA)

லெபனான் நாட்டில், ROACO அமைப்பின் 50ம் ஆண்டு திருப்பயணம்

கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் கீழ் பணியாற்றும் ROACO அமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, லெபனான் நாட்டில், திருப்பயணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கீழை நாடுகளில் வாழும் வறியோர் மற்றும் புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்ற திருஅவையில் உருவாக்கப்பட்டுள்ள ROACO என்ற அமைப்பின் உறுப்பினர்கள், இவ்வாரம், லெபனான் நாட்டில், உண்மைகளைக் கண்டறியும் திருப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் கீழ் பணியாற்றும் ROACO அமைப்பின் உறுப்பினர்கள், இவ்வமைப்பு துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, லெபனான் நாட்டின் புனித இரண்டாம் ஜான் பால் மையத்தில், புலம்பெயர்ந்தோருடன் இணைந்து, ஞாயிறு இரவு உணவருந்தினர்.

திங்கள் காலையில், நல்லாயன் அருள் சகோதரிகள் நடத்தும் சிறு மருத்துவ மனையொன்றை பார்வையிட்டனர். இம்மருத்துவ மனைக்கு ஒவ்வொரு நாளும் 150 நோயாளிகள், குறிப்பாக, இஸ்லாமியர், மருத்துவ உதவிகள் பெற வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்தோரிடையே பணியாற்றும் ROACO அமைப்பின் உறுப்பினர்கள், திங்கள் மாலை, லெபனான் காரித்தாஸ் இல்லம் சென்று, அங்கு அடைக்கலம் தேடியுள்ள மக்களைப் பார்வையிட்டனர்.

கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன், இங்கு, மதம், மொழி, இனம் என்ற எந்தப் பேதமுமின்றி, இம்மக்களுக்கு மொழியும், தொழில் கல்வியும் கற்றுக்கொடுக்கப்படுவதுடன், இவர்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவு செய்யப்படுகின்றன.

13 November 2018, 15:51