தேடுதல்

ஆயர்கள் மாமன்ற துறையின் நேரடிச் செயலர், ஆயர் ஃபாபியோ ஃபாபேனே ஆயர்கள் மாமன்ற துறையின் நேரடிச் செயலர், ஆயர் ஃபாபியோ ஃபாபேனே 

உலக ஆயர்கள் மாமன்றம் சவால்கள் நிறைந்தது - ஆயர் ஃபாபேனே

உலக ஆயர்கள் மாமன்றம், இளையோரை மையப்படுத்தி நடைபெறுவதால், சவால்கள் பலவற்றைச் சந்திக்கும் மாமன்றமாக இருக்கும் - ஆயர் ஃபாபியோ ஃபாபேனே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் தற்போது துவங்கியுள்ள உலக ஆயர்கள் மாமன்றம், இளையோரை மையப்படுத்தி நடைபெறுவதால், சவால்கள் பலவற்றைச் சந்திக்கும் மாமன்றமாக செயலாற்ற அழைக்கப்பட்டுள்ளது என்று, ஆயர்கள் மாமன்ற துறையின் நேரடிச் செயலர், ஆயர் ஃபாபியோ ஃபாபேனே (Fabio Fabene) அவர்கள் கூறினார்.

அக்டோபர் 3, இப்புதனன்று காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் துவங்கிய 15வது உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த ஆயர் ஃபாபேனே அவர்கள் இவ்வாறு கூறினார்.

இளையோரை மையப்படுத்தி இம்மாமன்றம் நடைபெற வேண்டும் என்ற ஆவலை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் உள்ள அனைத்து இளையோரையும் குறித்து ஆயர்களின் மாமன்றம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதையும் மாமன்றத்தின் நோக்கமாகக் கூறியுள்ளார் என்று ஆயர் ஃபாபேனே அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

சவால்கள் நிறைந்த இவ்வுலகில் வாழும் இளையோரின் கருத்துக்களுக்கும், கனவுகளுக்கும் ஈடுகொடுத்து, அவர்களுடன் இணைந்து நடப்பது, மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஆயர்களுக்கு முன் இருக்கும் ஒரு பெரும் சவால் என்று ஆயர் ஃபாபேனே அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இந்த மாமன்றத்தின் அமர்வுகளில் கலந்துகொள்ள ஆயர்கள் அல்லாத 49 பேர் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெண்கள், ஆண்கள் என்று சரிசமமான எண்ணிக்கையில், 34 இளையோரும் அடங்குவர் என்றும், ஆயர் ஃபாபேனே அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த மாமன்றத்திற்கு தயாரிப்பாக, மார்ச் மாதம் உரோம் நகரில் நடைபெற்ற இளையோர் கூட்டத்தில், "தாங்கள் திருஅவைக்கு எதிரானவர்கள் அல்ல, மாறாக, திருஅவை தங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் பின் தங்கியுள்ளது" என்று இளையோர் கூறியதை, ஆயர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆயர் ஃபாபேனே அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 15:43