தேடுதல்

Vatican News
ஆயர் மாமன்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஆயர் மாமன்ற பத்திரிகையாளர் சந்திப்பு 

இளையோருக்கு நம்பிக்கையும் ஊக்கமும் வழங்கும் திருஅவை

நற்செய்தியின் உதவியுடன் முதலில் நம்மை மாற்றுவோம், பின், நம் வழியாக, நம்மைச் சுற்றியிருப்பனவும், இவ்வுலகமும் மாற்றம் பெறும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் 'ரேரும் நொவாரும்' திருமடல் துவங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'லவ்தாத்தோ சி' திருமடல் வரை கூறப்பட்டுள்ள திருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் சுருக்கத்தை உள்ளடக்கிய கையேடு ஒன்றை, அக்டோபர் 24, இப்புதனன்று மாலை அமர்வில், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் இளையோர் பிரதிநிதிகளுக்கு வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ இளையோருக்குரிய சமூகக் கடமைகளை வலியுறுத்தும் வழிகாட்டி நூல் இது என்று, இவ்வேட்டின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் உதவியுடன் நம்மையே நாம் முதலில் மாற்றுவதுடன், அதன் பின், நம் சுற்றுச் சூழலையும், ஏன் இவ்வுலகையும் நம்மால் மாற்ற முடியும் என அதில் மேலும் எழுதியுள்ளார்.

இச்செவ்வாய்க்கிழமையன்று ஆயர் மாமன்றத்தந்தையர்களின் இறுதிப் பார்வைக்கென முன்வைக்கப்பட்ட இறுதி ஏட்டின் முன் வரைவு குறித்தும் இந்த புதன் மாலை, 19வது அமர்வில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

மேலும், உலகிலுள்ள இளையோர் அனைவருக்காகவும், ஆயர் மாமன்றத்தால் தயாரிக்கப்பட்ட மடல் ஒன்று, இப்புதன் காலையில் இடம்பெற்ற ஆயர் மாமன்ற அமர்வில், முன்வைக்கப்பட்டது.

செவ்வாயன்று முன்வைக்கப்பட்ட இறுதி ஏட்டின் முன்வரைவு குறித்தும், இந்த கடிதம் குறித்தும், திருத்தங்களும், இடைச்செருகல்களும் வரவேற்கப்பட்டன.

பிரான்சின் லியோன் மறைமாவட்ட துணை ஆயர் Emmanuel Gobilliard அவர்களால் வாசித்தளிக்கப்பட்ட இம்மடல், இளையோருக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தரும் திருஅவை, அவர்களுடன் எப்போதும் இணைந்து நடப்பது குறித்த உறுதியையும் தருகிறது என தெரிவிக்கிறது.

25 October 2018, 14:31