தேடுதல்

Vatican News
பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆயர் மாமன்ற நடவடிக்கை விவரம் 26.10.2018 பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆயர் மாமன்ற நடவடிக்கை விவரம் 26.10.2018 

செவி மடுக்கவும் செவிமடுக்கப்பட்டவும் இளையோர் விருப்பம்

ஆயர் மாமன்றத்தில் பெற்றதை உலகில் சென்று அறிவிக்க வேண்டிய கடமை இளையோர் வசம் உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரை மையப்படுத்தி நடைபெற்றுவரும் ஆயர் மாமன்றக் கூட்டம், இவ்வுலகில் நிலவும் அநீதிகள் குறித்து, சமூக, பொருளாதார உலகிற்கு எடுத்துரைக்க, ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் கர்தினால் Christoph Schönborn.

ஆயர் மாமன்றத்தில் வெள்ளியன்று நிகழ்ந்தவற்றைத் தொகுத்து வழங்கும் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய வியன்னா கர்தினால் Schönborn அவர்கள், பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கு இந்த ஆயர் மாமன்றத்தில் இதுவரை செவிமடுத்துக் கொண்டிருந்த உறுப்பினரகள், இதை உலகில் சென்று அறிவிக்க வேண்டிய கடமையைப் பெற்றுள்ளனர் என்று கூறியதுடன், திரு அவையை ஒரு வீடுபோல் எண்ணி, தங்கள் வருங்கால நம்பிக்கைகளை அதில் வைத்துள்ளதாக, ஆப்ரிக்க இளையோர் ஒருவர் தன்னிடம் பகிர்ந்து கொண்டதையும் எடுத்துரைத்தார்.

இதே பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Eamon Martin அவர்கள், 'அருளின் தருணமாக இருந்த இந்த ஆயர் மாமன்றக் கூட்டத்தில், தூய ஆவியாரின் பிரசன்னத்தையும் பலத்தையும் உணர முடிந்ததாகவும், நற்செய்தியின் தூதர்களாக இவ்வுலகில் இளையோர் செயல்படுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தான் நாடு திரும்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆயர் மாமன்றம் கொணர்ந்துள்ள சுடர், இளையோரிடையே ஒரு புதிய தீபத்தை ஏற்றிவைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என இப்பத்திரிகையாளர் கூட்டத்தில் உரைத்தார், கென்யா நாட்டு பேராயர், Anthony Muheria.

இளையோர் சார்பில் இச்சந்திப்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் அங்கத்தினரும், கியூபா நாட்டவருமான Erduin Alberto Ortega Leal அவர்கள் பேசுகையில், 'நிகழ்காலம் பற்றி மட்டுமே கவலைக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், வருங்காலத்தை அமைப்பது குறித்து அதிகக் கவலை கொண்டவர்கள் இளையோர் என்றும், செவிமடுக்கவும், செவிமடுக்கப்படுவதற்கும் உரிய வாய்ப்பை இந்த ஆயர் மாமன்றம் இளையோருக்கு வழங்கியது எனவும் தெரிவித்தார்.

27 October 2018, 17:31