தேடுதல்

Vatican News
அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் 

இளையோருக்கு செவிமடுக்க, இந்த மாமன்றம் கற்றுத்தந்துள்ளது

உலக ஆயர்கள் மாமன்றத்தில், ஆயர்களுக்கு, பரந்து, விரிந்ததொரு கண்ணோட்டத்தை உருவாக்க, இளையோரின் பங்கேற்பு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது - கர்தினால் தாக்லே

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தில், ஆயர்களுக்கு, பரந்து, விரிந்ததொரு கண்ணோட்டத்தை உருவாக்க, இளையோரின் பங்கேற்பு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது என்று, மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், அக்டோபர் 23, இச்செவ்வாயன்று நிகழ்ந்தனவற்றை செய்தியாளர்களுக்குத் தொகுத்து வழங்கிய கூட்டத்தில், கர்தினால் தாக்லே அவர்களோடு, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ, காங்கோ பேராயர் Bienvenu Manamika, Civiltà Cattolica மையத்தின் இயக்குனர், இயேசு சபை அருள்பணியாளர் அந்தோனியோ ஸ்பதாரோ, மற்றும் காரித்தாஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இளையவர் Joseph Sepati ஆகியோர் பங்கேற்றனர்.

இளையோருக்குச் செவிமடுப்பதிலும், இளையோரை சரியான முறையில் பயன்படுத்துவதிலும் இதுவரை பின்தங்கியிருந்த கத்தோலிக்கத் திருஅவை, இனிவரும் நாள்களில் இளையோருக்கு செவிமடுக்கவும், இளையோரை ஈடுபடுத்தவும், இந்த மாமன்றம் கற்றுத்தந்துள்ளது என்று கர்தினால் மாங் போ அவர்கள் கூறினார்.

திருஅவை பன்முகம் கொண்டிருக்கவேண்டும் என்று கூறும்போது, அது, கலாச்சாரப் பன்முகத்தை மட்டும் குறிப்பதில்லை, மாறாக, தலைமுறையினரிடையே உள்ள பன்முகத்தன்மையையும், குறிப்பாக, அதிகம் ஒலிக்காத பெண்களின் குரலையும் குறிப்பிடுகிறது என்று கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.

திருஅவையின் சக்திவாய்ந்த சமுதாயப் படிப்பினைகள் தனக்கு ஒரு புதிய படிப்பினையாக அமைந்தது என்று கூறிய இளையவர் Joseph Sepati அவர்கள், உலகில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு திருஅவையின் ஏடுகள் தீர்வுகளைத் தந்துள்ளன என்பதை, இந்த மாமன்றம் தனக்கு உணர்த்தியது என்று கூறினார்.

எம்மாவுஸ் சீடர்களுடன் இயேசு மேற்கொண்ட பயணம், மாமன்ற அரங்கத்தில் வழங்கப்பட்ட முன்வரைவு ஏட்டிற்கு, முகப்பு அடையாளமாக இருக்கும் என்றும், இளையோருக்கு ஒரு சிறப்பான மடல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், சமூகத் தொடர்பு திருப்பீட அவையின் தலைவர், பவுலோ ரூஃபீனி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

24 October 2018, 17:07