தேடுதல்

ஆயர்கள் மாமன்றம் குறித்து, அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் ஆயர்கள் மாமன்றம் குறித்து, அக்டோபர் 18ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டம் 

திருஅவையில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்

பெண்களின் பங்களிப்பு கூடினால், அது, திருஅவையை, ஆண் ஆதிக்கம் கொண்ட குருத்துவத்தனத்திலிருந்தும், அதிகார ஆசைகளிலிருந்தும் மீட்கும் - மாமன்ற ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வில், பெண்களின் பிரசன்னமும், பணிகளும் அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து, உலக ஆயர்கள் மாமன்றத்தில், அக்டோபர் 18 காலை இடம்பெற்ற அமர்வில் வெளிப்பட்டதென, செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

பணிவின் எடுத்துக்காட்டாக விளங்கும் அன்னை மரியாவை, தன் தாயாக கொண்டிருக்கும் திருஅவை பாரம்பரியத்தில், பெண்களின் பங்களிப்பு கூடினால், அது, திருஅவையை, ஆண் ஆதிக்கம் கொண்ட குருத்துவத்தனத்திலிருந்தும், அதிகார ஆசைகளிலிருந்தும் மீட்கும் என்று மாமன்ற ஆயர்கள் கருத்து தெரிவித்தனர்.

திருத்தூதர் பவுல், ஏதென்ஸ் நகரின், சந்தை வெளிகளில் மக்களைச் சந்தித்ததைப்போல, திருஅவையும், தன்னிலிருந்து வெளியேறிச் செல்லும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் வேளையில், அது, இன்னும் கூடுதலான இளையோரை சந்தை வெளிகளில் சந்திக்க இயலும் என்ற கருத்தையும், மாமன்றத் தந்தையர்கள் இவ்வமர்வில் பகிர்ந்துகொண்டனர்.

எதுவும் நிரந்தரமல்ல, முக்கியமல்ல என்ற கொள்கையை இளையோரிடம் பரப்பி வரும் இவ்வுலகப் போக்கின் நடுவே, இயேசுவின் வாழ்விலும், நற்செய்தியிலும் காணப்படும் வீரியத்தைக் குறைத்துவிடாமல், அதை இளையோருக்கு வழங்குவதற்கும், 'இளையோரின் மணத்தை உணர்வதற்கும்' திருஅவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று 16வது பொது அமர்வில் பங்கேற்றோர் கூறினர்.

மத்திய ஆப்ரிக்க குடியரசு, மத்தியக் கிழக்குப் பகுதி, உக்ரைன் ஆகிய இடங்களில், பல ஆண்டுகளாக நிலவிவரும் போர்ச் சூழல்களில் சிக்கியிருக்கும் இளையோர் மீது, திருஅவை தனிப்பட்ட கவனம் செலுத்தவேண்டும் என்ற கருத்தும், மனித வர்த்தகம் என்ற கொடுமையைக் குறித்து, ஆயர்கள் மாமன்றத்தின் அறிக்கை தன் எண்ணங்களை வெளியிடவேண்டும் என்ற கருத்தும் இந்த அமர்வில் வலியுறுத்தப்பட்டன.

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதியாக, இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள ஆர்த்தடாக்ஸ் தலைவர் ஹிலேரியன் அவர்கள், 16வது பொது அமர்வில் தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டபோது, கிறிஸ்தவ விழுமியங்களை சக்தியற்றதாக செய்யும் வண்ணம் வளர்ந்துவரும் இவ்வுலகப் போக்கினை முறியடிக்க, கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் சபையினரும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2018, 15:37