தேடுதல்

Vatican News
உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து அக்டோபர் 17 நிகழ்ந்த செய்தியாளர்கள் கூட்டம் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து அக்டோபர் 17 நிகழ்ந்த செய்தியாளர்கள் கூட்டம் 

இளையோர் தங்கள் பாதையை தேர்வு செய்ய உதவுதல்

கணனி உலகை நன்முறையில் பயன்படுத்தவும், நல்ல குடிமக்களாக வாழவும், புலம்பெயர்ந்தோரை வரவேற்று வாழவைக்கவும், இளையோருக்கு தூண்டுதலாக இருக்க, திருஅவை அழைப்புப் பெற்றுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் அண்மை அமர்வுகளில் Instrumentum Laboris ஏட்டின் மூன்றாம் பகுதி விவாதிக்கப்பட்டு வருவதையொட்டி, புதன் காலை அமர்வில், 'தேர்வுச் செய்தல்' என்ற தலைப்பிலும், மாலை அமர்வில், 'இயற்கையை பாதுகாத்தல்' என்பது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது.

இன்றைய டிஜிட்டல் இணையம், சில இக்கட்டான கூறுகளைக் கொண்டிருந்தாலும், அது பெரும் அச்சுறுத்தல் அல்ல என்பதை மனதில் கொண்டு, சுதந்திரமாகவும், கவனமுடனும், பொறுப்புணர்வுடனும், இணையம் வழியே நற்செய்தியை அறிவிக்கும் பணி இடம்பெற வேண்டும் என்ற கருத்து காலை அமர்வில் வலியுறத்தப்பட்டது.

இன்றைய இணைய பக்கங்களில் மூழ்கி, தங்களையே இழந்து வாழும் இளையோரைக் குறித்து கவலையை வெளியிட்ட ஆயர் மாமன்றத் தந்தையர்கள், இளையோரை ஈடுபடுத்தும் திருப்பயணங்கள், மாநாடுகள் போன்றவை, திரு அவையால் அடிக்கடி ஏற்பாடுச் செய்யப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தனர்.

நாட்டின் குடிமக்களுக்குரிய கடமைகளை இளையோர் ஆற்றுவதற்கும், அரசியலில் ஆர்வமுடன் ஈடுபடவும், தலத் திருஅவை அதிகாரிகள் ஊக்கமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட ஆயர்கள், கல்வியறிவில் ஒவ்வொருவரும் வளர, குடும்பமே சரியான சூழலை வழங்கமுடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறினர்.

தங்கள் விசுவாச உறுதிப்பாடுகளில் பலவீனமாக இருப்பதால், பல  இளையோர் திருஅவையை விட்டு விலகிச்செல்வது குறித்து கவலையை வெளியிட்ட ஆயர்கள், இயேசுவின் மொழியிலிருந்து விலகிச்செல்லாமல், இளையோரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது திரு அவையின் கடமை என்பதையும் வலியுறுத்தினர்.

திரு அவையின் நடவடிக்கைகள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் மீது காட்டவேண்டிய சிறப்பு அக்கறை குறித்தும், மாமன்ற தந்தையர்கள் எடுத்துரைத்தனர்.

18 October 2018, 12:40