தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் பாகிஸ்தான் இளம் மருத்துவர், டேனியல் பஷீர் திருத்தந்தையுடன் பாகிஸ்தான் இளம் மருத்துவர், டேனியல் பஷீர்  

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் இளைஞர்

பாகிஸ்தான் இளையோர், வாழ்வில் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள மத நம்பிக்கை எவ்விதம் உதவமுடியும் என்பதை, திருஅவை தங்களுக்குச் சொல்லித் தரவேண்டும் - இளம் மருத்துவர், டேனியல் பஷீர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் பணியிடங்களில் ஒதுக்கப்படுதல் என்பது, பாகிஸ்தானில் வாழும் கிறிஸ்தவ இளையோர் சந்திக்கும் பல சவால்களில் ஒன்று என்று, அந்நாட்டு இளம் மருத்துவர், டேனியல் பஷீர் அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு பெற்றுள்ள இளையோரில் ஒருவரான பஷீர் அவர்கள், பாகிஸ்தான் இளையோர், ஒவ்வொரு நாள் வாழ்விலும் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ள மத நம்பிக்கை எவ்விதம் உதவமுடியும் என்பதை, திருஅவை தங்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்று கூறினார்.

வறுமை நிலை காரணமாக, பாகிஸ்தான் இளையோர், ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் கட்டாயம் உருவாகிறது என்றும், இதனால், ஞாயிறு திருப்பலிகளையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது என்றும், பஷீர் அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானில் பணியாற்றும் அருள்பணியாளர்களும் ஆயர்களும், மேய்ப்புப்பணியில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும், இளையோருக்குச் செவிமடுத்தல், அவர்களை வழிநடத்துதல் போன்றவற்றில், குறிப்பிட்ட திறமையின்றி இருப்பதால், இளையோர் அவர்களை அணுக தயங்குகின்றனர் என்று, இளம் மருத்துவர் பஷீர் அவர்கள் எடுத்துரைத்தார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு தயாரிப்பு நிகழ்வாக, இவ்வாண்டு மார்ச் மாதம், உரோம் நகரில் நடைபெற்ற ஓர் இளையோர் கூட்டத்திலும், பாகிஸ்தான் இளம் மருத்துவர் பஷீர் அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 October 2018, 15:52