தேடுதல்

Vatican News
Gilfredo Marengo அவர்கள் எழுதிய "Humanae Vitae என்ற திருமடலின் பிறப்பு" என்ற நூலின் அட்டைப்படம் Gilfredo Marengo அவர்கள் எழுதிய "Humanae Vitae என்ற திருமடலின் பிறப்பு" என்ற நூலின் அட்டைப்படம் 

"மனித வாழ்வு என்ற திருமடலின் பிறப்பு" – புதிய நூல் வெளியீடு

50 ஆண்டுகளுக்கு முன் புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், Humanae Vitae திருமடல் வழியே, மனித உயிர்களுக்கு வழங்கிய மதிப்பு, இன்றும் பொருள் மிக்கதாய் உள்ளது - கர்தினால் பரோலின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பம் என்ற அடித்தளமின்றி, மனித சமுதாயமோ, திருஅவையோ இருந்திருக்க முடியாது என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வியாழன் மாலை, வத்திக்கானில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கூறினார்.

"மனித வாழ்வு" என்று பொருள்படும் "Humanae Vitae என்ற திருமடலின் பிறப்பு" என்ற தலைப்பில், வத்திக்கான் பதிப்பகம் உருவாக்கியுள்ள ஒரு நூலின் வெளியீட்டு விழாவில் உரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு முன் புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தன் திருமடல் வழியே, மனித உயிர்களுக்கு வழங்கிய மதிப்பு, இன்றும் பொருள் மிக்கதாய் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்கள் மற்றும், மனிதர்கள் நடுவே நிலவவேண்டிய உன்னதமான பாலியல் உறவுகள் குறித்து, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தன் திருமடலில் வெளியிட்ட கருத்துக்கள், அவரது காலத்தில் மட்டுமின்றி, நாம் வாழும் இன்றைய உலகிலும், பெரும் விவாதங்களை உருவாக்கி வருகின்றன என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

திருஅவை வாழ்வின் மையமாகவும் அடித்தளமாகவும் குடும்பங்கள் இருக்கவேண்டும் என்ற கருத்தை, புனிதத் திருத்தந்தை 6 பவுல் துவங்கி, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும் இன்றையத் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகிய அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதை, கர்தினால் பரோலின்  அவர்கள் தன் உரையில் நினைவுறுத்தினார்.

1968ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் வெளியிடப்பட்ட "மனித வாழ்வு" என்ற திருமடலுக்கு பின்னணியாக அமைந்த கருத்துக்களை ஆய்வு செய்யும் வகையில், ஜில்ஃபிரெத்தோ மரெங்கோ (Gilfredo Marengo) அவர்கள் எழுதிய "Humanae Vitae என்ற திருமடலின் பிறப்பு" என்ற நூல், அக்டோபர் 18, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

19 October 2018, 15:10