தேடுதல்

Vatican News
ஆப்ரிக்க குடிபெயர்வோர் ஆப்ரிக்க குடிபெயர்வோர்  (AFP or licensors)

2000மாம் ஆண்டிற்குப்பின், குடிபெயர்ந்தோர், 50 விழுக்காடு அதிகம்

பல்வேறு கூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்று தேவைப்படுவது, நம் புரிந்துகொள்ளுதலும், ஒருமைப்பாட்டுணர்வும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த 17 ஆண்டுகளில், உலகில், குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கை, 50 விழுக்காடு அதிகரித்துள்ளது என்ற உண்மை, ஒவ்வொரு மனிதரும் மாண்புடனும், பாதுகாப்புடனும், வாழ்க்கை தர உறுதிப்பாட்டுடனும், நடத்தப்பட வேண்டும் என்பதை நினைவுறுத்துவதாக உள்ளது என, ஐ.நா. அவையில் உரையாற்றினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

'உலக மயமாக்கலும் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்தலும்' என்ற தலைப்பில் ஐ.நாவில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, ஐ.நா. தலைமையகக் கூட்டங்களில், திருப்பீடப் பிரதிநிதியாகப் பங்கேற்கும், பேராயர் அவுசா அவர்கள், 2000மாம் ஆண்டிலிருந்து, 20017ம் ஆண்டிற்குள், குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை, 50 விழுக்காடு அதிகரித்து, 25 கோடியே 80 இலட்சத்தைத் தொட்டுள்ளதுடன், புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை, இதே காலக்கட்டத்தில், 1கோடியே 60 இலட்சம் என்பதிலிருந்து 2 கோடியே 60 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.  

இந்த எண்ணிக்கைகளையெல்லாம் தாண்டி, நாம், ஒவ்வொருவரையும் தனி மனிதராகக் கண்டு, அவர்களின் மனித மாண்பு, பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் போன்றவை உறுதி செய்யப்பட உழைக்க வேண்டியது அவசியம் என்றார் பேராயர் அவுசா.

வன்முறை, பாதுகாப்பற்ற நிலை, மனித உரிமை மீறல்கள், வேலை வாய்ப்பின்மைகள், சுற்றுச்சூழல் அழிவு போன்றவை, குடிபெயர்தலுக்கான காரணங்களாக அமைகின்றன என்ற பேராயர் அவுசா அவர்கள், ஏழை நாடுகளிலிருந்து பணக்கார நாடுகளுக்குக் குடிபெயர்வோரை சுமையாக நோக்காமல், அவர்களின் பங்களிப்பும் ஏற்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இயற்கைப் பேரழிவுகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, போன்றவைகளால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் குறித்து நம் பொறுப்புணர்வுகளை தூர விலக்கி வைக்க முடியாது என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் அவுசா அவர்கள், ஒன்றிணைந்த பொறுப்புணர்வு, மற்றும், ஒருமைப்பாட்டுணர்வின் அவசியம் குறித்தும் ஐ.நா. அவைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

20 October 2018, 15:23