தேடுதல்

Vatican News
குயின்ஸ்லாந்து பவளப்பாறை கடற்கரை குயின்ஸ்லாந்து பவளப்பாறை கடற்கரை  (AFP or licensors)

கடல் சார்ந்த உயிரினங்களைக் காக்க திருப்பீடத்தின் பரிந்துரை

அனைத்து உயிர்களுக்கும் முதலிடம் கொடுப்பதும், பொதுவான இல்லமான பூமியைக் காப்பதும் அனைவரின் கடமையாக மாறவேண்டும் - பேராயர் அவுசா

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழல் அழிவைத் தடுப்பதற்கு, உலக அளவில் உறுதியான சட்டங்கள் உருவாக்கப்படுவது முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இறைவா உமக்கே புகழ், நம் பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற திருமடலில் கூறியுள்ளதை, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. அவையில் கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், கடல் சார்ந்த உயிரினங்களைக் காக்க, கடல் சட்டங்கள் தேவை என்ற மையக்கருத்துடன் செப்டம்பர் 4ம் தேதி துவங்கிய ஐ.நா. அவை கருத்தரங்கில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய கடலின் எல்லைகளை மீறி, கடல் வளங்களைச் சூறையாடும் பெரும் நிறுவனங்களின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று, பேராயர் அவுசா அவர்கள் அழைப்பு விடுத்தார்.

கடல் வளங்களை  அறுவடை செய்யும் தொழில் நுட்பங்களை கட்டுப்படுத்துவது ஆறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று கூறிய பேராயர் அவுசா அவர்கள், ஒருவருடைய 'உரிமை' என்ற அடிப்படையைக் காட்டிலும், 'பொறுப்புணர்வு' என்ற அடிப்படையில் தொழில் நுட்பங்கள் உருவாக்கப்படவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

இயற்கையின் அனைத்து வளங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளை, 'நீலப் பொருளாதாரம்' என்று குறிப்பிட்டுப் பேசிய பேராயர் அவுசா அவர்கள், அனைத்து உயிர்களுக்கும் முதலிடம் கொடுப்பதும், பொதுவான இல்லமான பூமியைக் காப்பதும் அனைவரின் கடமையாக மாறவேண்டும் என்று தன் உரையில் வலியுறுத்தினார்.

05 September 2018, 15:32