தேடுதல்

Vatican News
வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

வேற்றினத்தவர் மீது அச்சம் பற்றிய கருத்தரங்கின் அறிக்கை

வேற்றினத்தவரைக் கண்டு அச்சம், இனவெறி ஆகிய குறைபாடுகளைக் களைய, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், அடிப்படை மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள், அனைத்து மனிதரும் சமமான மாண்பு பெறவேண்டும், அனைவருக்கும் ஒரே விதமான மனித உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பனவற்றை உறுதியாக நம்புகிறோம் என்று, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் அறிக்கை வெளியிடப்பட்டது.

வேற்றினத்தவர் மீது அச்சம் என்ற மையக்கருத்துடன், செப்டம்பர் 18ம் தேதி முதல், 20ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 13 கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வுலகில் நிலவிவரும் வேற்றினத்தவரின் அச்சம், இனவெறி, பாகுபாடுகள் ஆகிய தவறான போக்குகள், கிறிஸ்தவ சபைகளிலும், பிற மதங்களிலும் காணப்படுவதை தாங்கள் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்வதாக, கருத்தரங்கின் பிரதிநிதிகள், இவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்கும், பாதுகாப்பிற்கும் உரியவர் என்பதை கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் பறைசாற்றுவது மட்டும் போதாது, இந்த உண்மையை நடைமுறைப்படுத்தும் வண்ணம், நமது நிறுவனங்களும், இல்லங்களும் அன்னியருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

வேற்றினத்தவரைக் கண்டு அச்சம், இனவெறி ஆகிய குறைபாடுகளைக் களைவதற்கு, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், தங்கள் குழந்தைகளுக்கும், இளையோருக்கும், அடிப்படை மனித உரிமைகள் குறித்த தகுந்த விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

20 September 2018, 15:43