தேடுதல்

போஸே கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கின் அழைப்பிதழில், தோமா இயேசுவைத் தொடும் காட்சி போஸே கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கின் அழைப்பிதழில், தோமா இயேசுவைத் தொடும் காட்சி 

போஸே கிறிஸ்தவ ஒன்றிப்பு கருத்தரங்கிற்கு கர்தினால் கோக் செய்தி

இயேசுவின் காயங்களைத் தொடுவது என்ற உருவகம், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிக்கு மிகவும் பொருத்தமான ஓர் அடையாளம் - கர்தினால் கோக்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்த்த இயேசுவின் காயங்களை, திருத்தூதர் தோமா தொட்ட நிகழ்வைக் குறிக்கும் ஓவியம், போஸே துறவு மடத்தில் நடைபெறும் ஆர்த்தடாக்ஸ் ஆன்மீக கருத்தரங்கின் அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பது பொருத்தமாக உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

போஸே துறவு மடத்தில் செப்டம்பர் 5ம் தேதி முதல் ஆரம்பாகியிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு பன்னாட்டு கருத்தரங்கிற்கு, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் (Kurt Koch) அவர்கள், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் என்ஸோ பியாங்கி அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இயேசு உயிர்த்துவிட்டார் என்பதை நம்ப மறுத்த திருத்தூதர் தோமா, இயேசுவின் காயங்களில் தன் விரல்களை வைப்பதற்குமுன், தேர்ந்து தெளிதல் என்ற வழிமுறையில் பொதிந்துள்ள, அனுபவித்தல், பொருள் தருதல், தெரிவு செய்தல் என்ற மூன்று நிலைகளைக் கடந்து வந்துள்ளார் என்று, கர்தினால் கோக் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், கிறிஸ்துவின் காயங்களாக உள்ளன என்றும், இயேசுவின் காயங்களைத் தொடுவது என்ற உருவகம், கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிக்கு மிகவும் பொருத்தமான ஓர் அடையாளம் என்றும், கர்தினால் கோக் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கருத்தரங்கிற்கு செய்தி வழங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், தேர்ந்து தெளிதல் என்பது, நம் எல்லைகளையும், பாவம் என்ற உண்மையையும் உணர்வது என்றும், கிறிஸ்தவர்களின் உன்னத நிலை, தாழ்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் மனமாற்றத்தில் அடங்கியுள்ளது என்றும் தன் செய்தியில் கூறியுள்ளார்.

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களைப் போலவே, கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும், இன்னும் ஏனைய கிறிஸ்தவ, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தலைவர்களும், போஸே பன்னாட்டு கருத்தரங்கிற்கு வாழ்த்துச் செய்திகள் வழங்கியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2018, 15:19