சோதனை பதிப்பு

Cerca

Vatican News
அணுப்பரிசோதனனை நடத்தப்பட்டபோது அணுப்பரிசோதனனை நடத்தப்பட்டபோது 

அணு ஆயுதங்களை ஒழிக்கும் உலக நாள் குறித்து திருப்பீடம்

செப்டம்பர் 26, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாளன்று, அணு ஆயுதங்கள் குறித்து திருப்பீடத்தின் எண்ணங்கள் ஐ.நா.அவையில் பதிவாயின

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 26, இப்புதனன்று, அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்கும் உலக நாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், அணு ஆயுத ஒழிப்பு குறித்து திருப்பீடத்தின் எண்ணங்களை, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் தலைமைச் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள், ஐ.நா. தலைமையகத்தில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் பதிவு செய்தார்.

அணு ஆயுத ஒழிப்பு உலகநாளையொட்டி பேராயர் காலகர்

இன்றைய உலகில் நிலவும் மோதல்களும், போர்களும், அணு ஆயுத ஒழிப்பைக் குறித்து அரசுகள் மத்தியில் தயக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று காரணம் கூறி, அணு ஆயுதங்களை தொடர்ந்து பாதுகாத்து வருவது, இவ்வுலகை எவ்வகையிலும் அமைதியாக வாழவிடாது என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

அணு ஆயுதமற்ற உலகம் என்ற ஒப்பந்தத்தில் 61 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன என்றாலும், இவற்றில், 14 நாடுகளே தங்கள் நாட்டின் அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்துள்ளன என்று பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நிரந்தர அமைதி, நீடித்த முன்னேற்றத்தை உறுதியாக்க...

மேலும், மனித உரிமைகளை மையப்படுத்தி, ஐ.நா.தலைமையகத்தில் நிகழ்ந்த மற்றொரு கூட்டத்தில் உரை வழங்கிய பேராயர் காலகர் அவர்கள், மனித உரிமைகள் முழுமையாக மதிக்கப்படும் வேளையில்தான், நிரந்தர அமைதியும், நீடித்த முன்னேற்றமும் உறுதியாகும் என்று கூறினார்.

ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 73வது அமர்வில், "மனித உரிமைகளின் உலகளாவிய அறிவிப்பு: அமைதியையும், முன்னேற்றத்தையும் அடையும் வழி" என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், பேராயர் காலகர் அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

மனித உரிமைகள் என்ற மிக அடிப்படையான, அசைக்கமுடியாத ஓர் உரிமை, ஒவ்வொரு மனிதரும் மாண்பு மிக்கவர் என்ற அடிப்படை உண்மையின் மீது கட்டப்படும் வேளையில், அவ்வுரிமை அனைவரையும் சென்றடையும் என்று பேராயர் காலகர் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

27 September 2018, 15:34