தேடுதல்

பேரருள்திரு Marie Duffe பேரருள்திரு Marie Duffe  

தண்ணீர், இயற்கை பாதுகாப்பு நாள் செய்தியின் மையம்

தண்ணீர், ஏன், கடல்களும், பெருங்கடல்களும், மனித வாழ்வின் ஆதாரமாக இருந்தாலும், அதே நீரிலே ஏராளமான புலம்பெயர்ந்தவர்கள் இறக்கின்றனர் என, பேரருள்திரு Marie Duffe அவர்கள் கூறினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நான்காவது ஆண்டாக, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள் கடைப்பிடிக்கப்படும்வேளையில், செப்டம்பர் 1, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும் செய்தி, தண்ணீரை மையப்படுத்தியதாக அமைந்திருக்கும் என்று, திருஅவை அதிகாரி ஒருவர், இவ்வெள்ளியன்று அறிவித்தார்.

இயற்கையின் பாதுகாப்பு நான்காவது உலக செப நாளை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கிய, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின் செயலர், பேரருள்திரு Bruno Marie Duffe அவர்கள், இவ்வாறு அறிவித்தார்.

தண்ணீரைப் பெறுவது, ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்ற நிலையில்,  இன்றைய உலகில், அறுபது கோடிக்கு அதிகமானோர் குடிநீர் வசதியின்றி உள்ளனர் என்றும், திருத்தந்தையின் இந்த உலக செப நாளுக்குரிய செய்தி, தண்ணீரை மையப்படுத்தி இருக்கும் என்றும், பேரருள்திரு Marie Duffe அவர்கள் தெரிவித்தார்.  

தண்ணீர் என்ற எண்ணம் எழும்போது, நம் சகோதரர்களிடம், உடன்பிறப்பு மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு காட்டுவது பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு, பேரருள்திரு Marie Duffe அவர்கள் கூறினார்.

புதிய வாழ்வில் நம்பிக்கை வைத்து, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும் புலம்பெயரும் மக்களை நினைத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்ட திருப்பீட அதிகாரி Duffe அவர்கள், மதிப்பு, மாண்பு, சுதந்திரம், வருங்கால நம்பிக்கை போன்றவற்றை எதிர்பார்த்துவரும், புலம்பெயரும் இளையோர் பற்றி, சிறப்பாக நினைத்துப் பார்க்குமாறு, உலக சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார்.  

கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராக, 1989ம் ஆண்டு பணியாற்றிய, முதுபெரும் தந்தை திமித்ரியோஸ் (Dimitrios) அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உலக செப நாளை, கத்தோலிக்க திருஅவையின் செப நாளாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2018, 15:19