தேடுதல்

சைப்ரஸ் கடல்வாழ் உயிரினங்கள் ஆய்வு சைப்ரஸ் கடல்வாழ் உயிரினங்கள் ஆய்வு 

திருப்பீடம்: கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

கடல்வாழ் உயிரினங்கள், உலகின் பேராசைக்கு பலியாகிவரும் அவலத்தை தடுத்து நிறுத்துவது, பூமிக்கோளத்தைக் காப்பாற்றும் ஒரு முக்கிய முயற்சி என்று அருள்பணி Arellano கூறினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,12,2018. கடல் சார்ந்த தொழில்கள், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது என்றாலும், கடல் வாழ் உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

உணவு மற்றும் வேளாண்மை உலக நிறுவனமான FAO, ஜூலை 9ம் தேதி முதல் 13ம் தேதி முடிய உரோம் நகரில் நடத்திவரும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி Fernando Chica Arellano அவர்கள், மீன்பிடிக்கும் தொழிலில் செலுத்தப்படவேண்டிய கவனத்தை வலியுறுத்திப் பேசினார்.

பெருங்கடல்கள், பூமிக்கோளத்தின் பெரும்பான்மையான நீரை மட்டும் கொண்டிருக்கவில்லை, கூடுதலாக, பெரும்பான்மை உயிரினங்களையும் கொண்டுள்ளன என்பதால், அவ்வுயிரினங்களை மனிதரின் பேராசையால் அழிப்பது ஆபத்து என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியிருப்பதை, அருள்பணி Arellano அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கடல்வாழ் உயிரனங்கள் மட்டுமல்ல, கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போரும் வர்த்தக உலகின் பேராசைக்கு பலியாகிவரும் அவலத்தை தடுத்து நிறுத்துவது, நம் பூமிக்கோளத்தைக் காப்பாற்றும் ஒரு முக்கிய முயற்சியாக இருக்கவேண்டும் என்று அருள்பணி Arellano அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

உரோம் நகரின் FAO மையத்தில் நடைபெற்றுவரும் இந்த பன்னாட்டு கருத்தரங்கத்தை, நெதர்லாந்து அரசு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் திருப்பீடம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2018, 16:22