தேடுதல்

ஐ.நா.வில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா ஐ.நா.வில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா 

கடல்களில் கனிம வளங்கள் தோண்டப்படுவது முறைப்படுத்தப்பட..

பெருங்கடல்களுக்கு அடியில் தாதுச்சுரங்க நடவடிக்கைகள் பற்றிய திருப்பீடத்தின் நிலைப்பாடு

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள் 

மனித சமுதாயத்தின் பொதுச்சொத்தாகிய கடல்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அங்குச் கனிம வளங்கள் தோண்டப்படுவதை முறைப்படுத்துவதற்கு, பன்னாட்டு அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுக்குத் திருப்பீடம் ஆதரவளிக்கின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பித்த, உலகளாவிய கடல்படுகை அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தின் இரண்டாவது பகுதியாக, ஜமைய்க்கா நாட்டின் கிங்ஸ்டன் நகரில், இவ்வாரத்தில் நடைபெற்ற 24வது கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வில் பணியாற்றும் திருப்பீடத் தூதர், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

சமுதாயத்தில் அதிகரித்துவரும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, மேலும் அதிகமான கனிம வளங்கள் அவசியமாகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் அதேவேளை,  கடல்களின் படுகைகளில், வெகு ஆழத்தில் தோண்டப்படும் சுரங்கங்கள், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என எச்சரித்தார், பேராயர் அவுசா. 

இக்கூட்டத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய வாழ்த்துக்களையும் தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள், மனித வாழ்வும், கடல்சார்ந்த சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுமாறும், 1982ம் ஆண்டின் கடல் சார்ந்த ஐ.நா. ஒப்பந்தம் அமல்படுத்தப்படுமாறும் வலியுறுத்தினார்.

கடல்களுக்கு அடியில் 1,400 மீட்டர் முதல் 3,600 மீட்டர் வரை கனிமவளச் சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன என செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 15:59