இறைஊழியர் Guéranger அவர்களின் பணி தொடர்ந்து பலன் அளிக்கட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறைஊழியர் Dom Guéranger அவர்களின் பணிவாழ்வு, விசுவாசமுள்ள மக்களிடையே தூய்மையின் கனிகளைத் தாங்கி, திருஅவையின் மையத்தில் துறவற வாழ்வின் பலனளிக்கும் ஓர் உயிருள்ள சான்றாக விளங்கட்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைஊழியர் Dom Guéranger இறைபதம் அடைந்த 150-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, புனித ஆசீர்வாதப்பர் சபையின் தலைவர் தந்தை டோம் ஜெஃப்ராய் கெம்லின் அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.
இறைஊழியர் Dom Guéranger அவர்களிடம் விளங்கிய திருப்பீடத்திற்குப் பிரமாணிக்கம் (fidelity to the Holy See) ஆன்மிகத் தந்தைமை (spiritual fatherhood) ஆகிய இரண்டு முக்கிய பண்புகளைத் தனது செய்தியில் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இவையே விசுவாசிகளை கடவுளை நோக்கி வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியில் திருஅவையின்மீதான இறைஊழியர் Dom Guéranger அவர்களின் அன்பையும், இறைவேண்டலில் ஒன்றிப்பையும், முன்மாதிரியான வாழ்வையும் எடுத்துக்காட்டி அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.
அமைதியான வேளைகளிலும், துன்பத்தின் தருணங்களிலும், விசுவாசிகள் அனைவரும் இறைஊழியர் Dom Guéranger அவர்களிடம் தங்கள் இறைநம்பிக்கையை வலுப்படுத்துவதைக் கண்டுகொண்டனர் என்றும், இறைவேண்டல் மீதான ஓர் ஈர்ப்பையும், திருஅவைமீதான அன்பையும் அனுபவித்து மகிழ்ந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இறுதியாக, Dom Guéranger அவர்களின் பணி தொடர்ந்து பலனளிக்க வேண்டும் என்றும், அவரது மரபை நினைவு கூர்வோருக்கு அவர் இறையாசீரை வழங்க வேண்டும் என்றும் கூறி இறைவேண்டலுடன் தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்