தேடுதல்

இளைஞர்கள், அவர்களின் கல்வியில் முதலீடு செய்ய வேண்டும்

நம் வாழ்வில், நம் எதார்த்தங்களில், நமது நாடுகளில், நாம் எப்போதும் பதட்டங்கள் மற்றும் மோதல்களுடன் வாழ வேண்டியிருக்கும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இத்தாலியின் வெரோனா நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 18, இச்சனிக்கிழமையன்று, அமைதி அரங்கில் நிகழ்ந்த பல்வேறு நாட்டவர்களுடனான சந்திப்பின்போது அவர்கள் திருத்தந்தையிடம் எழுப்பிய கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும்.

01. அநீதிகள் நிறைந்த சூழலில் நீதியை கட்டியெழுப்புவது மிகவும் கடினமாக இருக்கிறது. இதனை எவ்வாறு எதிர்கொள்வது? இதனைச் செய்துமுடிக்க எது நமக்கு உதவியாக இருக்கும் : Elda Baggio, பிரேசில்

 பாதிப்பிக்குள்ளாகும் மிகச்சிறியோரின் பக்கம் நம்மைத் திருப்பி அவர்களுக்காக நாம் பணியாற்றவேண்டுமென நம்மைப் பணிக்கிறது இயேசுவின் நற்செய்தி. சீடர்களின் பாதங்களைக் கழுவியதன் வழியாக இயேசு இதனைச் செய்துகாட்டினார். இயேசு தனது செயல்களால் மரபுகளையும் தப்பெண்ணங்களையும் உடைத்து, தம் காலத்தின் சமூகம் மறைத்த அல்லது இகழ்ந்த மக்களைக் காணும்படி செய்கிறார். மேலும் அவர் அவர்களை மாற்ற விரும்பாமல், கருவியாக்காமல், அவர்களின் குரல், அவர்களின் வரலாறு, அவர்களின் அனுபவங்களை இழக்காமல் இதனைச் செய்கிறார்.

மிகச்சசிறியோராகிய ஏழை எளிய மக்களைச் சந்தித்து அவர்களின் வலிகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் அவர்களைப் பாதிக்கும் வன்முறைக்கு எதிராக, அலட்சியம் மற்றும் அதன் நியாயப்படுத்தல்களுக்கு எதிராக அவர்கள் பக்கம் நின்று போராடுங்கள்.

02. கல்விக்கான இடங்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப முன்னுதாரணத்தாலும், எந்த விலை கொடுத்தாலும் இலாபம் என்ற கலாச்சாரத்தாலும் பாதிக்கப்படும்போது, ​​இளைஞர்கள் அமைதியின் தொழில்முனைவோராக இருக்க நாம் எவ்வாறு உதவ முடியும்? : Maoz Inon, இஸ்ரேல் மற்றும் Aziz Sarah, பாலஸ்தீனம்

நமக்கு ஒரு கல்வி கிராமம் தேவை, அதில் சிறந்த ஆற்றல்களை முதலீடு செய்து, சமூகத்தில் பார்க்கும் நபரை எப்போதும் மையமாக வைத்து, ஒருவருக்கொருவர்மீதான பிணைப்பு வலையமைப்பில், உடன்பிறந்த உறவு, ஒருங்கிணைவு, சேவை ஆகியவற்றால் அது வளர்க்கப்பட வேண்டும். இது வயதுவந்தோர் மற்றும் இளைஞர்கள் ஒருங்கே சம்பந்தப்பட்ட பணி.

03. ஆணும் பெண்ணும் கடவுளின் படைப்புடன் நல்லுறவைப் பேணவில்லை என்றால்,  மனிதர்களிடையே அமைதி இருக்காது. அனைத்து உயிரினங்களுக்கிடையில் நீதியின் உறவுகளை உருவாக்குவதற்கு நேரம் எடுக்கும். ஆகவே, வேகமும் உடனடித் தன்மையும் கொண்ட இந்தக் காலத்தில் அதை எப்படி மீண்டும் கண்டுபிடிப்பது?  : Annamaria, Vicenza

எல்லாவற்றையும் விரைவாக செய்துமுடித்து, அதற்கு உடனடியாக விடை தேட முற்படுகிறோம். ஆனால், இதற்குப் போதிய நேரத்தை நாம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். மேலும் நாம் எப்போதும் இறுதி நேரத்தில் அவசர அவசரமாக ஒரு காரியத்தை செய்துமுடிக்கவே விரும்புகின்றோம். மறுபுறம், இது இயற்கையானது அல்ல என்று நாம் உணர்கிறோம். நம் சமூகத்தில் நாம் சோர்வான காற்றை சுவாசிக்கிறோம், பலர் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில்லை, எப்போதும் நேரம் இல்லை என்ற உணர்வால் சோர்வடைகிறார்கள். பந்தயத்தை எவ்வாறு மெதுவாக்குவது என்பதைத் தெரிந்துகொள்வது சில வேளைகளில் நமக்கு அவசியமாகிறது. செயல்களால் நம்மை மூழ்கடிக்க அனுமதிக்க கூடாது. கடவுள் நமக்குள் செயல்பட நாம் இடமளிக்க வேண்டும்.

04. மக்கள், அனைத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் உள்ள சமூகங்களுக்கு செவிசாய்ப்பதன் வழியாக உண்மையான அமைதி கிடைக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ஆனால், இந்தக் கட்டத்தில் நாம் போராடுகிறோம். ஆகவே, மோதல் நிறைந்த சூழலில் நலமான மற்றும் ஆக்கபூர்வமான வழியில் வாழ கற்றுக்கொள்வது எப்படி? :  Riccardi மற்றும் Sergio Paronetto

நம் வாழ்வில், நம் எதார்த்தங்களில், நமது நாடுகளில், நாம் எப்போதும் பதட்டங்கள் மற்றும் மோதல்களுடன் வாழ வேண்டியிருக்கும். ஆகவே, நாம் அனுபவிக்கும் பதட்டங்களில் எந்தத் துருவங்கள் விளையாடுகின்றன, எந்த மோதல்களில் நேரடியாகவோ அல்லது சாட்சிகளாகவோ நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும். அவைகள் நம் வாழ்வின் ஓர் அங்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

05. மக்களாட்சியின் பங்கேற்பாளர்களாக நம்மை உருவாக்க கல்வி, பொருளாதார, சமூக நிறுவனங்கள் மிகவும் அவசியம். எத்தகைய தலைமைத்துவத்தால் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல முடியும்? Mahbouba Seraj

தலைவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணம், மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் சார்பாகவும், அவர்களுக்குச் சாதகமாகவும் முடிவெடுக்கவும் செயல்படவும் அழைக்கப்படும் ஒரு தனிமனிதனின் எண்ணமாக இருந்தால், நாம் நமக்கான ஒரு வறிய மற்றும் வறுமையான பார்வையை உருவாக்குகிறோம் என்று அர்த்தம். இது படைப்பாற்றலை மங்கச் செய்வதுடன், தலைவர்களாக இருப்பவர்களின் ஆற்றல்கள் மற்றும் சமூகத்தை ஒட்டுமொத்தமாக மலட்டுத்தன்மைக்கு ஆளாக்கும்.

ஆகவே, ஒரு தனிநபரின் முயற்சியால் மட்டுமே எதிர்காலத்திற்கான பாதை செல்ல முடியாது என்ற செய்தியை தெரிவிக்க இளைஞர்கள், அவர்களின் கல்வியில் முதலீடு செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு நபரும் அவரவர் பணிகளுக்கும் திறன்களுக்கும் ஏற்ப அவரவர் பங்கைச் செய்கிறனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2024, 16:55