தேடுதல்

விசுவாசம் என்பது, மறைப்பணிக்கான மனதைரியமாக மாறியுள்ளது

கிறிஸ்தவ வாழ்வின் துவக்கமே கடவுளுடன் ஆன சந்திப்புடன் துவங்குகிறது. இது நம்மைத் தேடி வந்து நம்மை அவரின் உறவில் இணைய அழைப்பு விடுக்கும் கடவுளைச் சார்ந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அருள்பணியாளர்களே, இருபால் துறவியரே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். இத்தாலிய கவிஞர்கள் தாந்தே, கர்தூச்சி போன்றோரின் படைப்புகளுக்குப் பெரும் தூண்டுதலாக இருந்த San Zeno  பசிலிக்காப் பேராலயத்தில் உங்களைச் சந்திக்கும் நான் இரு விடயங்கள் குறித்து உங்களுடன் உரையாட விரும்புகிறேன். ஒன்று நீங்கள் பெற்றிருக்கும் அழைப்பு, அது எப்போதும் பெறப்பட்டு வரவேற்கப்பட வேண்டும். இரண்டாவது, உங்கள் பணிவாழ்வு குறித்து, அதாவது, மனதைரியத்துடன் நிறைவேற்ற வேண்டிய மேய்ப்புப் பணி குறித்து.

முதலில், உங்களுக்குக் கிடைத்திருக்கும் அழைப்பை வரவேற்று நில்லுங்கள். கலிலேயாவில் தன் பணியைத் துவங்கிய வேளையில், ஏரியின் கரையோரம் சென்று கொண்டிருந்த இயேசு, படகில் இருந்த மீனவ சகோதரர்களை உற்று நோக்கி, அவர்களை தன்னைப் பின்செல்ல அழைக்கிறார். இங்கு நடந்ததை நாம் மறந்துவிட வேண்டாம். கிறிஸ்தவ வாழ்வின் துவக்கமே கடவுளுடன் ஆன சந்திப்புடன் துவங்குகிறது. இது நம் அர்ப்பணத்தையோ திறமைகளையோச் சார்ந்தது அல்ல, மாறாக, அது நம்மைத் தேடி வந்து நம்மை அவரின் உறவில் இணைய அழைப்பு விடுக்கும் கடவுளைச் சார்ந்தது.  நாம் மற்றவர்களை விடவும் உயர்ந்தவர்களாக இல்லாதிருப்பினும், அவர் நம்மை அழைக்கிறார், இது இறைவனின் அருள். இந்த அழைப்பின் வியப்பை மறவாதிருப்போம். இறையருளால் கிட்டிய இந்த அழைப்பு குறித்த நினைவை நமக்குள் உயிரோட்டமாய் வைத்திருப்போம். அவரே நம்மைத் தேர்ந்தெடுத்தார் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோமானால், எந்தத் துயர்கள், இடர்பாடுகள் வந்தாலும் நம்மைக் கைவிடமாட்டார் என்பதே நமக்கு உறுதியைத் தரும். ஆகவே, நம் அழைப்பை நினைவில் கொண்டு, ஒவ்வொரு நாளும் அதனை ஏற்றுக்கொண்டு, இறைவனோடு ஒன்றித்திருங்கள். இந்த அனுபவம் நம்முள் உறுதியாக வேரூன்றியிருந்தால், நாம் நிறைவேற்றவேண்டிய பணிகளில் நாம் மனதைரியத்துடன் ஈடுபடமுடியும்.

அடுத்து, நான் மீண்டும் உங்களை கலிலேயா கடலோரம் அழைத்துச் செல்கிறேன். இது உயிர்ப்பிற்குப் பின்னான நிகழ்வு பற்றியது. அதே ஏரிக்கரையில் சீடர்களை மீண்டும் சந்திக்கிறார் இயேசு. இப்போது, சீடர்கள் ஏமாந்துபோன உணர்வுடன், தோல்வியை சந்தித்த கசப்பான எண்ணத்துடன், மீன்பிடிக்கச் சென்று ஒன்றும் கிட்டாமல் இருக்கின்றனர். மனம் தளர்ந்து போயிருக்கும் மனநிலையிலிருந்து அவர்களை வெளிவர வைக்கிறார். வலையை திரும்பவும் போடும்படி பணிக்கிறார். இறுதியில், அவர்கள் இழுக்க முடியாதபடி பெருமெண்ணிக்கையில் மீன்கள் கிடைக்கின்றன. 

ஆம், இங்கும் நற்செய்தி அறிவிப்பு முயற்சிகள், அதாவது தேவையிலிருப்போருக்கான பணிகள், பயிற்சி பள்ளிகளாக, மருத்துவமனைகளாக, மருத்துவ சேவை மையங்களாக, புகலிட இல்லங்களாக, ஆன்மிக மையங்களாகப் பெருகியுள்ளதைக் காண்கிறேன்.

அதாவது, விசுவாசம் என்பது, மறைப்பணிக்கான மனதைரியமாக மாறியுள்ளது. இன்றும் அது நமக்குத் தேவைப்படுகிறது. நற்செய்தி அறிவிப்பிலும் சான்றுபகர்தலிலும் மனதைரியத்துடன் செயல்படுதல், பிறரன்பு நடவடிக்கைகளில் செயலாற்றும் விசுவாசம் குறித்த மகிழ்வு, காலத்தின் அறிகுறிகளை அறிந்துகொண்டு, தேவையிலிருப்போருக்கு உதவவேண்டியதை அறிந்துகொள்ளும் திருஅவையின் மனவுறுதி போன்றவை இன்று தேவைப்படுகின்றன. அனைவருக்கும் நாம் இறைஇரக்கத்தின் வருடுதலை கொணரவேண்டும். குறிப்பாக, எதிர்நோக்கு குறித்து தாகம் கொண்டிருப்போர், வாழ்க்கையின் விளிம்பு நிலையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போர், வாழ்வில் காயம்பட்டோர், தவறிழைத்ததால் காயம்பட்டோர், சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்ட எளியோர் ஆகியோருக்கு இறைஇரக்கத்தைக் கொணர்வோம்.

விசுவாசத்தின் மனவுறுதியைக் கொண்டு விசுவாச பிறரன்பு பணிகளை ஆற்றுவதை உங்கள் கடந்த கால வரலாற்றிலிருந்து நீங்கள் பெற்றுள்ளீர்கள். தகுதியுடைய புனிதத்துவம், அதாவது, வாழும் விசுவாசத்துடன் இணைந்த உறுதியான பிறரன்பு நடவடிக்கைகள் தினசரி வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் இறையரசை விதைக்கின்றன. பகையுணர்வுடன் கூடிய குடும்பங்களினால் துன்புற்ற இரு காதலர்கள் பற்றி எடுத்துரைக்க வெரோனாவின் அழகு ஷேக்ஸ்பியரை தூண்டியது என்றால், கிறிஸ்தவர்களாகிய நாமும் நற்செய்தியால் தூண்டப்பட்டவர்களாக, சாவையும் பகைமையையும் விட அன்பு பலம் பொருந்தியது என்பதை விதைக்க நம்மை அர்ப்பணிப்போம். இதையே கனவு காணட்டும், அன்பின் நகரான வெரோனா. கடவுளின் அன்பு உங்களோடு உடன் நடந்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2024, 17:01