தேடுதல்

திருத்தந்தையின் மே மாத செபக் கருத்து!

உருவாக்கப் பயிற்சி என்பது, ஒரு குறிப்பிட்ட தருணத்தில் முடிவடைவதில்லை, ஆனால் அது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. இது அப்பயிற்சியாளரை அறிவார்ந்த ரீதியாக மனிதநேய ரீதியாக, உணர்வு ரீதியாக, ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இருபால் துறவறத்தார் மற்றும் அருள்பணித்துவ மாணவர்கள் அனைவரும் மனிதநேயம், மேய்ப்புப்பணி, ஆன்மிக மற்றும் குழும உருவாக்கப் பயிற்சிகள் (formation) வழியாக, அவர்களின் தனிப்பட்ட இறையழைத்தலில் வளர்வதற்கு ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்ய விசுவாசிகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 30, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள தனது மே மாத செபக் கருத்தில் இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்தகைய பயிற்சிகளே நற்செய்தியின் சாட்சிகளாக இருப்பதற்கு அவர்களைத் தூண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இறையழைத்தலும் ஒவ்வொரு பக்கத்திலும் மெருகூட்டப்படவேண்டிய, வேலை செய்யப்பட வேண்டிய மற்றும், வடிவமைக்கப்பட வேண்டிய "மென்மையற்ற வைரம்" என்றும் தனது செபக் கருத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஒரு நல்ல அருள்பணியாளர் அல்லது அருள்சகோதரி, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு ஆணாக, பெண்ணாக, இறைவனின் அருளால் உருவானவராக, தனது சொந்த வரம்புகளை உணர்ந்தவராக, நற்செய்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாட்சியாக, இறைவேண்டல் வழி தனது வாழ்க்கையை நடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

அருள்பணியாளர் பயிற்சியகம் மற்றும் நவதுறவறம் தொடங்கி, அவர்களின் தயாரிப்பு ஒருங்கிணைவு (integrally) கொண்டதாக, அதாவது, மக்களுடைய வாழ்க்கையுடன் நேரடித் தொடர்பு கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், இது மிகவும் இன்றியமையாத ஒன்று என்றும் தனது செபக் கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

உருவாக்கப் பயிற்சி என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்துடன் முடிவடைவதில்லை, மாறாக, அது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது (on going formation) என்றும், இது அப்பயிற்சியாளரை அறிவார்ந்த ரீதியாக மனிதநேய ரீதியாக, உணர்வு ரீதியாக, ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் குழும வாழ்வில் வாழ்வதற்கான தயாரிப்பும் இப்பயிற்சியில் அடங்கியுள்ளது என்று கோடிட்டுக்காட்டியுள்ள திருத்தந்தை, சில வேளைகளில், இது கடினமாக இருந்தாலும் கூட, குழும வாழ்க்கை மிகவும் வளமையடைய இந்தத் தயாரிப்பு காரணமாகவும் அமைந்துள்ளது என்றும் தனது செபக் கருத்தில் உரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2024, 10:28