தேடுதல்

எதிர்நோக்கு என்னும் நம்பிக்கை நம் வாழ்வை நிரப்பட்டும்!

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் வேரூன்றிய கிறிஸ்தவ நம்பிக்கை, நமது இறுதி இலக்கான விண்ணுலகில் கடவுளுடன் இருக்கும் என்றுமுள்ள மகிழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமன்னனிக்கம் - வத்திக்கான்

இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னும் எதிர்நோக்கால் நாம் ஈர்க்கப்பட்டுள்ளோம் என்றும், கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் கொண்டுள்ள இறைநம்பிக்கைக்கு ஏற்ப தூயதொரு வாழ்க்கையை வாழ்ந்து கிறிஸ்துவுக்குச் சான்று பகர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மே 9, இவ்வியாழனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவின் திருப்புகழ் மாலை வழிபாட்டிற்குப் பின்னர் எதிர்வரும் யூபிலி ஆண்டு 2025-ஐ அறிவித்து 'எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது' என்ற மையக்கருத்தில் வெளியிட்ட ஆணைமடலில் எதிர்நோக்கு என்னும் நம்பிக்கை குறித்துப் பேசியுள்ளார்.

இந்த யூபிலி ஆண்டு நாம் நமது நம்பிக்கையில் புதுப்பிக்கப்படுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும்" என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், திருப்பயணம் என்பது  "ஒவ்வொரு யூபிலி நிகழ்வின் அடிப்படை நிகழ்வு"  என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

குறிப்பாக, உலகிலுள்ள அனைத்துத் தலத்திருஅவைகளையும், அருள்பணியாளர்கள்  மற்றும் விசுவாசிகளை ஒப்புரவு என்னும் அருளடையாளத்திற்குத் தயார் செய்ய  அழைப்புவிடுத்த திருத்தந்தை, இது இந்த யூபிலி ஆண்டு முழுவதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒளியில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒளிரட்டும் என்றும், அனைவருக்கும் உரையாற்றப்படும் கடவுளின் அன்பின் செய்தியாக அந்நம்பிக்கை அமையட்டும் என்றும், உலகலாவியத் திருஅவை இந்த நம்பிக்கையின் செய்திக்கு உண்மையுள்ள சான்று பகரட்டும் என்றும் கூறினார்.

தற்போதைய சூழலை குறித்து பேசிய திருத்தந்தை, வன்முறை மற்றும் மோதல்களால் பெருகிய முறையில் பாதிக்கப்பட்டுள்ள உலகில் அமைதிக்கான தனது விருப்பத்தை வெளியிட்டதுடன், நம்பிக்கையை ஆதரிக்கவும் வளர்க்கவும் ஒரு சமூக உடன்படிக்கைக்கும் அவர் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

2025-ஆம் ஆண்டு முதல் பொதுச் சங்கத்தின் 1700-வது ஆண்டு விழா என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருங்கிணைந்த பயணத்தின் வெளிப்பாடுகளை வலியுறுத்தியதுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் புதிப்பிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் வேரூன்றிய கிறிஸ்தவ நம்பிக்கை, நமது இறுதி இலக்கை அதாவது, விண்ணுலகில் கடவுளுடன் இருக்கும் என்றுமுள்ள மகிழ்ச்சியை சுட்டிக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையை நாம் நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் நாட்களை எதிர்நோக்கு என்னும் நம்பிக்கையின் வலிமை நிரப்பட்டும் என்றும், இப்போதும் எப்போதும் அவருக்குப் புகழும் மகிமையும் உண்டாவதாக! என்று கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

24 டிசம்பர் 2024 அன்று, "நம்பிக்கையின் திருப்பயணிகள்" என்ற தலைப்புடன் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் புனித கதவு திறப்புடன் யூபிலி ஆண்டு தொடங்குகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2024, 16:21