தேடுதல்

செயற்கை நுண்ணறிவு செயற்கை நுண்ணறிவு   (REUTERS)

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.

ஜெயந்த் ராயன் – வத்திக்கான்

இத்தாலியின் புலியாவில் உள்ள போர்கோ எஞ்ஞாசியாவில் (Borgo Egnazia) ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும், G7 நாடுகளின் 'செயற்கை நுண்ணறிவுக்கான' அமர்வில் திருத்தந்தை பங்கேற்பதை திருப்பீடத் தகவல் தொடர்பகம்  உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவர்கள், G7 உச்சி மாநாட்டுப் பணிகளில் திருத்தந்தை ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறை எனவும், இக்கூட்டத்தில் விருந்தினர்களுக்கான அமர்வில் திருத்தந்தை கலந்துகொள்வார் எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

இத்தாலியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்களுக்கு மனதார நன்றி கூறிய பிரதமர், அவருடைய பங்கேற்பு இத்தாலி நாட்டுக்கும்  மற்றும் அனைத்து G7  நாடுகளுக்குமிடையே நன்மதிப்பை  உருவாக்கும் என்றும்,  செயற்கை நுண்ணறிவு குறித்த பிரச்சனைகளில் திருப்பீடம் வழங்கிய பங்களிப்பை இத்தாலி அரசு மேம்படுத்த விரும்புவததாகவும், வாழ்வுக்கானத் திருப்பீடக் கழகம் (Pontifical Academy for Life) வெளியிட்ட ''செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான உரோமையின் அழைப்பு 2020'' என்ற அறிக்கை,  செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்கு உறுதியான நெறிமுறைகள் மற்றும்  உறுதியான பயன்பாட்டைக் கொடுக்க வழிவகுக்கிறது என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்கு, நெறிமுறை மற்றும் கலாச்சார கட்டமைப்பின் வரையறைக்கு திருத்தந்தையின்  பங்கேற்பு ஒரு தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்று அவர் உறுதியாக நம்புவதாகவும், தொழில்நுட்பத்தில் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் நமது திறன் பற்றி 1979ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்  அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தனது புகழ் பெற்ற உரையில் நினைவுகூர்ந்ததை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்துலக சமூகத்தின் திறனை மீண்டும் அளவிட முடியும் என்றும் கூறினார் பிரதமர் மெலோனி.

தேசிய மற்றும் அனைத்து நாடுகளின் அரசியல் செயல்பாடு என்பது மனிதர்களிடமிருந்து வருகிறது, மனிதர்களால் செயல்படுத்தப்படுகிறது, மேலும் அது மனிதர்களுக்கானது  என்று மேற்கோள் காட்டிய பிரதமர் அவர்கள், செயற்கை நுண்ணறிவு, இக்காலத்தின் மிகப்பெரிய மானுடவியல் சவாலாக இருக்கும் என்றும்,  சிறந்த வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகக் கருதப்பட்டாலும் அதனுடன் மகத்தான அபாயங்கள் உள்ளடங்கியிருப்பதையும்,  இது உலகளாவிய சமநிலையை பாதிக்கும் என்றும்  தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 57வது உலக அமைதி தினத்திற்காக தனது செய்தியை செயற்கை நுண்ணறிவு மற்றும் அமைதிக்காக அர்ப்பணித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்தின் ஞானத்தை வளர்க்க  செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை, முழுமையாக மனிதத் தகவல்தொடர்பு பணி சார்ந்ததாக உருவாக்கவேண்டும் என மனிதகுலத்தை அவர் வலியுறுத்தினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2024, 13:32