தேடுதல்

வரலாற்று அறிவியலுக்கான திருப்பீட செயற்குழு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் வரலாற்று அறிவியலுக்கான திருப்பீட செயற்குழு உறுப்பினர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

மனித குலத்திற்கான பணியாளர்களாக மாறுவோம் - திருத்தந்தை

கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது

மெரினா ராஜ் - வத்திக்கான்

வரலாற்று ஆய்வுகள் அனைத்தும் நம்மை மனிதநேயத்தில் தலைவர்களாகவும், மனித குலத்திற்குப் பணியாளர்களாகவும் மாற்றட்டும் என்றும், திருஅவையானது கிறிஸ்து மற்றும் மனித சமுகம் என்னும் இரண்டிற்கும் இடையில் நின்று, கிறிஸ்துவிற்காக, கிறிஸ்துவில், கிறிஸ்துவிற்குள் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 20 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் வரலாற்று அறிவியலுக்கான திருப்பீட செயற்குழு உறுப்பினர்கள் ஏறக்குறைய 35 பேரை சந்திந்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். அந்நிறுவனத்தின் 70 ஆவது ஆண்டிற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

திருஅவையானது பெண்கள் மற்றும் ஆண்களோடு சேர்ந்து எல்லாக் காலங்களிலும் வரலாற்றில் பயணிக்கின்றது, எந்தவொரு குறிப்பிட்ட கலாச்சாரத்தையும் சார்ந்தது அல்ல என்றும், நற்செய்தியின் துணிவுள்ள மற்றும் சாந்தமுள்ள சாட்சியாக ஒவ்வொரு கலாச்சாரத்தின் இதயத்திலும், சந்திப்புச் சமூகத்தை உருவாக்க விரும்புகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாகக் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்னும் விவிலிய வரிகளை வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உரையாடலுக்கான எல்லைகளைத் திறப்பதன் வழியாக வரலாற்று ஆய்வுப் பணியைத் தொடர வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதன் வழியாக நற்செய்தியின் நம்பிக்கை ஒளியைக் கொண்டு வர முடியும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், வரலாற்றிற்கும் திருஅவைக்கும் இடையே ஓர் உறவு உள்ளது என்ற திருத்தந்தை தூய ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தார்.

தனிப்பட்ட சுய-குறிப்பு மற்றும் கருத்தியல்களின் தூண்டுதல்கள் மோதலைத் தூண்டுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இதுபோன்ற சோதனைகளை எவ்வாறு எதிர்ப்பது, ஆர்வத்துடன் வாழ்வது என்பதை வரலாற்று அறிவியல் ஆய்வு மற்றும் படிப்பின் வழியாக அறிந்துகொள்ளும் அக்குழுவினரை வாழ்த்தினார்.

வரலாற்று அறிவியல் ஆய்வின் வழியாக, ஒற்றுமைக்கான பணியின் மறுபிறப்பு அனுபவத்தையும்,  பெந்தேகோஸ்து நாளில் தூய ஆவியார் நமக்கு வெளிப்படுத்தும் நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சாட்சியமளிப்பது என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்து, எல்லா மனிதர்களிடத்திலும், மனிதர்களிடையேயும், மனிதர்களுக்காகவும் இருக்கின்றார் என்றும், தெய்வீக மீட்பருக்கும் மனிதகுலத்திற்கும் இடையே உண்மையான மற்றும் தாழ்மையான சிறந்த இடைத்தரகராக கிறிஸ்து இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2024, 12:20