தேடுதல்

இளையோருக்கு செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இளையோருக்கு செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

இளையோரே, வாழ்க்கையின் தெருக்களை நற்செய்தியால் அழகுபடுத்துங்கள்!

விரைவாக எழுந்து மற்றவர்களுடன் ஒன்றித்துப் பயணம் செய்து உங்கள் படைப்பாற்றலால் உலகை வண்ணமயமாக்குங்கள் என்றும், வாழ்க்கையின் தெருக்களை நற்செய்தியால் அழகுபடுத்துங்கள் : திருத்தந்தை பிரான்ஸ்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இளையோரே, நாம் அனைவரும் கடவுளின் அன்புக்குரிய குழந்தைகள் என்ற மாபெரும் கொடையைப் பெற்றுள்ளதால், அவருடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்ரல் 28, இஞ்ஞாயிறன்று, வெனிஸ் நகரின் புனித மாற்கு சதுக்கத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னையின் பேராலயத்திற்கு முன்பாக கூடியிருந்த இளையோருக்கு வழங்கிய செய்தியில் இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அலைபேசியை அணைத்துவிட்டு மற்றவரின் குரல்களுக்குச் செவிடுக்குமாறு அவர்களிடம் விண்ணப்பித்தார்.

கடவுளுக்குள் இருக்கும் அழகை மீண்டும் கண்டுபிடிப்பதற்காகவும், இளையோரை அன்புகூரும் மற்றும், எப்போதும் நம்மை வியப்புக்குள்ளாக்கும் ஓர் இளமைக் கடவுளான இயேசுவின் பெயரில் மகிழ்ச்சியடைவதற்காகவும் நாம் இந்தநாளில் இங்கே கூடியிருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

தூய கன்னி மரியாவின் பண்புநலன்களை எடுத்துரைக்கும் 'அவர் எழுந்து விரைந்து சென்றார்' (காண்க லூக் 1:39) என்ற இரண்டு வார்த்தைகளில் ‘எழுந்து’ ‘விரைந்து’ என்ற (arose and went) வினைச்சொற்கள் குறித்த தனது சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

எழுந்திடுவோம்

இம்மண்ணிலிருந்து எழுந்திடுங்கள், ஏனென்றால் நாம் விண்ணகத்திற்காக உருவாக்கப்பட்டவர்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சோகத்திலிருந்து எழுந்து உங்கள் பார்வையை மேலே உயர்த்துங்கள் என்றும், சோபாவில் உட்காராமல் வாழ்க்கையின் முன் நிற்கும்பொருட்டு எழுந்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நாம் ஒவ்வொருவரும், “என் கடவுளே, இந்த வாழ்க்கைக்கு நன்றி. என் கடவுளே, என் வாழ்க்கையில் என்னை அன்பு கூர்ந்திடும். என் கடவுளே, நீரே என் உயிர்" என்ற சிறியதொரு செபத்தை சொல்வோம் என்றும் அவ்விளையோரிடம் அறிவுறுத்தினார் திருத்தந்தை.

இறைவன்  நம் கரங்களைப் பற்றிக்கொள்ள நாம் அனுமதிப்போம், ஏனெனில் அவர் மீது நம்பிக்கை வைப்பவர்களை அவர் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை, ஆனால் எப்போதும் அவர்களை மன்னித்து உயர்த்துகிறார் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நாம் தவறுகள் செய்யும் வேளையிலும் கூட கடவுள் நம்மைத் தண்டியாது தூக்கிவிடுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

உறக்கம் அல்லது பாவத்திலிருந்து நாம் எழுந்த பிறகு, விடாமுயற்சியின் நற்பண்பு வழியாக, நாம் இயேசுவில் ஒன்றித்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, விரைவான உணர்ச்சிகள் மற்றும் தற்காலிக திருப்தியுடன் வாழ்வதற்குப் பதிலாக, சமூகமாக ஒன்றித்து இறைவேண்டல் செய்வதன் வழி, நம்பிக்கையிலும்  அன்பிலும் ஒன்றாக நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

ஆனால் என்னைச் சுற்றியிருக்கும் அனைவரும், சமூக ஊடகங்கள் மற்றும் காணொளி விளையாட்டுகளில், அவரவர் விரும்பியபடி நேரங்களை செலவிட்டுக்கொண்டு இருப்பதாக நீங்கள் கூறலாம், ஆயினும், நீங்கள் அலைபேசியை அணைத்துவிட்டு மக்களைச் சந்தியுங்கள் என்றும் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு நற்செய்தியைத் திறந்திடுங்கள் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை.

விரைந்திடுவோம்

அன்னை மரியாவின் இரண்டாவது பண்பான 'விரைந்தார்' என்ற வார்தையைக் குறித்து பேசிய திருத்தந்தை, 'எழுவது' என்பது ஒரு கொடையாகத் தன்னை வரவேற்பது என்றால், 'விரைவது' என்பது தன்னையே ஒரு கொடையாக மாற்றுவது ஆகும் என்றும்,  "வாழ்க்கை ஒரு கொடை என்றால், நாம் மற்றவர்களுக்கு நம்மைக்  கொடையாகக்  கொடுத்து வாழ அழைக்கப்படுகிறோம் என்றும் விளக்கினார்.

படைப்பு என்பது நம்மை நாமே அழகை உருவாக்குபவர்களாக இருப்பதற்கும், முன்பு இல்லாத ஒன்றை உருவாக்குவதற்கும் நம்மை அழைக்கிறது என்று எடுத்துக்கூறிய திருத்தந்தை, வாழ்க்கை என்பது நிர்வகிக்க அல்ல, மாறாக, பிறருக்கு நம்மையே கொடுக்க அழைப்பதால், ஆன்மாவை முடக்கும் சமூக ஊடகங்களின் மதிமயக்கும் உலகில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடவுளிடம் உங்கள் இதயத்தைத் திறந்து, அவருக்கு நன்றி சொல்லுங்கள், நீங்கள் இருக்கும் அழகைத் தழுவுங்கள்; உன் வாழ்க்கையில்  அன்பில் நிலைத்திருங்கள். அப்படியானால், வெளியே சென்று, மற்றவர்களுடன் ஒன்றித்துப் பயணம் செய்து உங்கள் படைப்பாற்றலால் உலகை வண்ணமயமாக்குங்கள் என்றும், வாழ்க்கையின் தெருக்களை நற்செய்தியால் அழகுபடுத்துங்கள் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை,  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2024, 15:42