தேடுதல்

செஞ்சிலுவை சங்கத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ் செஞ்சிலுவை சங்கத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

சகோதரத்துவம் சாத்தியம் என எடுத்துரைக்கும் செஞ்சிலுவை சங்கத்தார்

நற்செய்தியின் மகிழ்ச்சி அனைவரையும் சென்றடைய சகோதரத்துவ ஆற்றலுடன் நட்புறவை வளர்த்து, பிறரது துயரத்தைப் போக்க முயல்வோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மனிதநேயம், பாரபட்சமற்ற தன்மை, நடுநிலைமை, சுதந்திரம், தன்னார்வத் தொண்டு, ஒற்றுமை, உலகளாவிய தன்மை ஆகிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட செஞ்சிலுவை சங்கத்தாரின் அர்ப்பணிப்புள்ள பணியானது சகோதரத்துவம் சாத்தியமானது என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் தூயவர், கடவுளால் அன்பு செய்யப்பட்டவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 6 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியின் செஞ்சிலுவை சங்கத்தார் ஏறக்குறைய 6000 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் 160 ஆவது ஆண்டிற்காகவும் அவர்களது அர்ப்பணிப்புள்ள பணிக்காகவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

1864ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் போரினால் பாதிக்கப்பட்ட, காயம்பட்ட, நோயுற்ற மக்களுக்கு உதவுவதற்காக, வடக்கு இத்தாலியின் மிலான் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கமானது இன்றும் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், 160 ஆண்டிற்கான முழக்கமாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள “எல்லா இடங்களிலும் யாருக்கும்" என்ற வரிகளை முன்னிலைப்படுத்தி உரையாற்றினார்.

யாருக்கும் என்ற வார்த்தையானது ஒவ்வொரு மனிதரும் மாண்புள்ளவர், தகுதியானவர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றது என்றும், அவர்களது வாழ்க்கை நிலை, இயலாமை, தோற்றம், சமூக அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை நாம் வேறு வழியில் பார்க்கவோ விலக்கவோ கூடாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.      

இனவேறுபாடும் அவமரியாதையும் களைகளைப் போல வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் திறமை, தாராளமனம், அர்ப்பண உணர்வு கொண்டவர்களாய் தேவையில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்றும்,  இதன்வழியாக மட்டுமே ஒருவரையும் விலக்காமல் அனைவரையும் உள்ளடக்கிய சகோதரத்துவத்தை நம்மால் அடையமுடியும் என்றும் கூறினார்.  

“எல்லா இடங்களிலும் யாருக்கும்” என்ற முழக்கங்கள் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் உள்ள இறைவார்த்தைகளான “வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்” என்பதை நினைவூட்டுகின்றது என்றும், நற்செய்தியின் மகிழ்ச்சி அனைவரையும் சென்றடைய சகோதரத்துவ ஆற்றலுடன் நட்புறவை வளர்த்து, பிறரது துயரத்தைப் போக்க முயல்வோம் என்றும் கூறினார்.

மனிதர்களை முன்னிலைப்படுத்தி நாம் பணியாற்றும்போது உரையாடல், பொது நலனுக்கான ஒன்றிணைந்த செயல்பாடுகள், பகைமையின் சுவர்களை தகர்த்தல், கருத்தியல் ஆர்வங்கள், அதிகாரங்கள் போன்றவற்றால் ஏற்படும் குருட்டுத்தனத்தைக் கடத்தல் போன்றவற்றை நம்மால் செய்ய முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 13:28