தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

வாழ்க்கைக்கான அர்த்தத்தையும் மதிப்பையும் தரும் அரவணைப்பு

குறைவுபடும் அரவணைப்பு, நம்மை மீட்கும் அரவணைப்பு, நம் வாழ்வை மாற்றும் அரவணைப்பு என்னும் மூன்று தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அரவணைத்தல் என்பது மனித அனுபவத்தின் மிகவும் தன்னிச்சையான வெளிப்பாடுகளில் ஒன்று என்றும், இப்பூமியில் நாம் வாழ்கின்ற நாள்கள் மற்றும் ஆண்டுகளுக்கான அர்த்தத்தையும் மதிப்பையும் அரவணைப்புத் தருகின்றது என்று கூறினார்.

ஏப்ரல் 25 வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த இத்தாலிய கத்தோலிக்கச் செயல்பாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 60,000 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வியக்கத்தின் இவ்வாண்டு தலைப்பான திறந்த கைகளுடன் அரவணைத்தல் என்பது பற்றி எடுத்துரைத்தார்.

மனிதனின் வாழ்க்கை அவனது பெற்றோரின் அரவணைப்புடன் ஆரம்பமாகின்றது, பலரும் அதனைப் பின்பற்றுகின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், குறைவுபடும் அரவணைப்பு, நம்மை மீட்கும் அரவணைப்பு, நம் வாழ்வை மாற்றும் அரவணைப்பு என்னும் மூன்று தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

மேலும், இறைத்தந்தையின் அரவணைப்பானது நாம் அவரை மறுத்து விலகிச்சென்றாலும் நம்மை இரக்கத்துடன் நாடி வரும் ஊதாரி மகன் உவமையில் சொல்லப்படும் தந்தையின் அரவணைப்பை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை

குறைவுபடும் அரவணைப்பு

வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அரவணைப்பு சில சமயங்களில் வரவேற்கப்படுவதில்லை, மூடல்களையும் எதிர்ப்பையும் சந்திக்கின்றது என்றும், நமது கைகள் அரவணைப்பை வழங்குவதற்குப் பதிலாக  நிராகரிப்பு, வன்முறை, எதிர்ப்பு மற்றும் அவநம்பிக்கையின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

போர் மற்றும் வன்முறைக்குக் காரணமாக இருப்பதும் இந்த நிராகரிக்கப்பட்ட அரவணைப்பினாலேயே என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தவறான எண்ணம், தவறான புரிதல், சந்தேகம்,போன்றவை அதிகரித்து மற்றவர்களை எதிரியாகக் காணும் அளவிற்கு நிலைமை தொடர்கின்றதுஎன்றும் சுட்டிக்காட்டினார்.

உலகின் பல பகுதிகளில் நம் கண்களுக்கு முன்னால் இத்தகைய தவறான சூழல் உள்ளது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நமது உடனிருப்பு, பணி போன்றவற்றின் வழியாக அரவணைப்பின் பாதையானது, வாழ்க்கைக்கானப் பாதை என்பதை சான்று பகரக் கூடிய வகையில் வாழ வலியுறுத்தினார்.

நம்மை மீட்கும் அரவணைப்பு

மனித நேயத்துடன் ஒருவரை ஒருவர் அரவணைப்பது என்பது அன்பு, மரியாதை, நம்பிக்கை, ஊக்கம், நல்லிணக்கம் போன்ற நேர்மறையான அடிப்படையான மதிப்புகளை வெளிப்படுத்துகின்றது என்றும், நம்பிக்கையின் அடிப்படையில் நாம் அதை அனுபவிக்கும் போது அது இன்னும் இன்றியமையாததாகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

இறைத்தந்தையின் உணர்வுடன் நாம் அரவணைக்கும் போது நம் ஒவ்வொருவரின் செயலிலும் இறைத்தந்தையின் முகம் பிரதிபலிக்கின்றது என்றும், இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்ட மன்னிப்பு, குணமளித்தல், விடுதலை, பணி ஆர்வம் போன்றவை நமது வாழ்விலும் வெளிப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

குழந்தையைப் போல இயேசு நம்மை அரவணைக்க அனுமதிப்போம், அதன் வழியாக பிறரையும் அரவணைக்கக் கற்றுக்கொள்வோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நம்மை மீட்கும் இறைத்தந்தையின் அரவணைப்பிலிருந்து விலகாதிருப்போம் என்றும் கூறினார்.

நம் வாழ்வை மாற்றும் அரவணைப்பு

அரவணைப்பானது நமது வாழ்வை மாற்றக்கூடியது, புதிய பாதைகளையும் நம்பிக்கையின் பாதைகளையும் வெளிப்படுத்தக்கூடியது என்று கூறிய திருத்தந்தை அவர்கள் இறைவனை உறுதியாகப் பற்றிக்கொண்ட புனித பிரான்சிஸ் போல பன்முகத்தன்மை கொண்ட கிறிஸ்துவின் சீடர்களாக வாழவும் தொண்டுப்பணிகள் செய்யவும் வலியுறுத்தினார்   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2024, 11:44