தேடுதல்

நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் 

தாய்வானுக்கு திருத்தந்தையின் அனுதாப தந்தி

தாய்வான் நிலநடுக்கத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏறக்குறைய 25 பேர் காணாமல்போயுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்வானின் ஹுவாலியன் நகர் மக்களுக்கு தன் ஒருமைப்பாட்டையும் நெருக்கத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தூரத்தில் 34.8 கிலோமீட்டர்  ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரும் பாதிப்புக்களை உருவாக்கியுள்ளதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டின்  ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் John Baptist Lee Keh-Mean அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இந்த இயற்கை பெரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதயம் நிறை ஒருமைப்பாட்டையும், ஆன்மீக நெருக்கத்தையும் திருத்தந்தை வெளியிடுவதோடு, இந்நில நடுக்கத்தில் இறந்தோர், காயமடைந்தோர், குடியிருப்புக்களை இழந்துள்ளோர் மற்றும் இந்த இடர்பாடுகளிடையே மக்களுக்காக உழைத்துவருவோர் என அனைவருக்கும் திருத்தந்தையின் செபவுறுதியை வியாழனன்று அனுப்பிய அந்த தந்திச் செய்தியில் தெரிவித்துள்ளார் திருப்பீடச் செயலர்.

அனைவருக்கும் ஆறுதல் மற்றும் மனவுறுதியை வழங்கவேண்டுமென இறையாசீருக்காக திருத்தந்தை செபிப்பதாகவும் மேலும் அதில் கூறப்பட்டுள்ளது.

புதனன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏறக்குறைய 25 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்வானில், அதாவது 1999 ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2400 பேர் உயிரிழந்ததோடு, 5000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2024, 15:02