தேடுதல்

மக்கள் அமைதியாக வாழ உதவுங்கள் – திருத்தந்தை

பாதுகாப்பாக மற்றும் அமைதியாக வாழ்வது மக்கள் அனைவரின் உரிமை - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மத்திய கிழக்குப் பகுதிகளை வன்முறைச் சூழலுக்குத் தூண்டும் செயலை நிறுத்தவேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டு நாட்டு மக்களும் அருகருகே அமைதியுடன் வாழ உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பாக, அமைதியாக வாழ்வது மக்கள் அனைவரின் உரிமை என்றும் எடுத்துரைத்தார்.

காசாவில் விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட உறுதியான பேச்சுவார்த்தைக்கான பாதைகளைப் பின்பற்றுவோம் என்றும், போரினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறவும், பிணையக்கைதிகள் விடுவிக்கப்படவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

அமைதிக்காக செபிப்போம், வன்முறைக்கு வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு ஆம் என்றும் பதிலளிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், துன்புறும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார்.

"எதிர்காலத்திற்கான கேள்வி – ஏமாற்றம் மற்றும் விருப்பத்திற்கு இடையிலான இளையோர்" என்ற கருப்பொருளில் தனது நூறாவது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் இத்தாலியின் திருஇருதயக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இளையோர் மற்றும் சமூகத்தேவைகளில் கவனத்தைச் செலுத்தி தங்களது கல்விச்சேவையைத் தொடர அவர்களை ஊக்குவித்தார்.

மேலும் உரோம், இத்தாலி மற்றும் பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் திருப்பயணிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், அமெரிக்கா, போலந்து நாட்டுத் திருப்பயணிகளையும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள Sant'Egidio அமைப்பின் தலைவர்களையும் அன்புடன் வரவேற்றார்.

மே 25-26 ஆகிய தினங்களில் திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் முதல் உலக குழந்தைகள் தினத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகள், நிகழ்விற்காக உழைக்கும் ஆண் பெண் தன்னார்வலர்கள் ஆகிய அனைவரையும் அன்புடன் வாழ்த்தினார்.

அமைதியான மற்றும் மகிழ்வான சிறந்த உலகிற்கு குழந்தைகளின் மகிழ்ச்சியும் விருப்பமும் தேவை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் என உலகின் பல பகுதிகளில் போரினால் துன்புறும் குழந்தைகளுக்காக செபிப்போம் உலக அமைதிக்காக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 April 2024, 13:13