தேடுதல்

திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்தவர் திருத்தந்தை ஏழாம் பயஸ்

சாந்த குணம் கொண்ட திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் நற்செய்தியைத் துணிவுடன் அறிவித்தவர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

1823 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் இறைப்பதம் சேர்ந்த திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்கள் தன் மந்தைக்காக தன் வாழ்வை கையளித்த நல்லாயனாக திகழ்ந்தவர் என்றும், கலாச்சாரம் மற்றும், தாழ்ச்சியின் அடையாளமாகவும், துறவி, ஆயர், திருத்தந்தை என பல பொறுப்புக்களில் பல்வேறு தியாகங்களைச் செய்து இறைவனுக்கும் திருஅவைக்கும் தன்னையே அர்ப்பணித்தவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஏழாம் பயஸ் இறந்த இருநூறாவது ஆண்டை முன்னிட்டு உரோமிற்கு வந்திருந்த Cesena-Sarsina, Tivoli, Savona மற்றும் Imola மறைமாவட்டத்தைச் சார்ந்த திருப்பயணிகள் ஏறக்குறைய 1000 பேரை ஏப்ரல் 20 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஏழாம் பயஸ் வாழ்வில் மிளிர்ந்த ஒன்றிப்பு, சான்று வாழ்வு, கருணை போன்றவைகள் நமது தனிப்பட்ட மற்றும் பொதுவான பாதைகளுக்கு சான்றுள்ளதாகவும், சிறப்பானதாகவும் அமையும் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஏழாம் பயஸ் வாழ்ந்த காலத்தில், பெரும் சச்சரவுகள், பிளவுகள், பிரெஞ்சுப்புரட்சி, நெப்போலியன் படையெடுப்புக்களால் ஏற்பட்ட கொந்தளிப்புக்கள் என பல இருந்த சூழலிலும், ஒற்றுமையைப் பாதுகாப்பதில் விடாமுயற்சியுடன் செயல்பட்டவர் என்றும், அமைதி மற்றும் உறுதியான விடாமுயற்சியால் தனக்கு வந்த எல்லா தடைகளையும் மாற்றியவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னை ஒதுக்குபவர்கள், தனிமைப்படுத்துபவர்கள், ஆகிய அனைவரிடமிருந்தும் தன்னைக் காத்த திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்களின் வாழ்வானது, தார்மீக ரீதியாக, மிகவும் ஒருங்கிணைந்த, வலுவான மற்றும் அதிக நம்பகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க நம்மை அழைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும் உலகளாவிய திருஅவை, உள்ளூர் தலத்திருஅவை, பங்குத்தளம் மற்றும் குடும்பங்களில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புபவர்களாக இருக்க நம்மைத் தூண்டுகிறது என்றும், அவரைப்போல ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும், நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்தவும், தொண்டுப்பணிகளில் உண்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்த குணம் கொண்ட திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்கள் வார்த்தையாலும், வாழ்க்கையாலும் நற்செய்தியைத் துணிவுடன் அறிவித்தவர் என்றும், நமது நற்சான்றுள்ள வாழ்க்கை, ஆடம்பரத்தில் இல்லை மாறாக தாழ்ச்சி, வளமை, பொறுமை, இரக்கச்செயல்கள் போன்றவற்றில் அடங்கியுள்ளது எனக் கூறியவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் பணியாளரான திருத்தந்தை ஏழாம் பயஸ் அவர்களின் வாழ்வு, உண்மை அன்பு, ஒற்றுமை, உரையாடல், வலுவற்றவர்களுக்குக் கவனம் செலுத்துதல், மன்னிப்பு, அமைதிக்கான விடாமுயற்சியுடன் கூடிய தேடல் போன்றவற்றை நினைவூட்டுகின்றது என்றும், இவற்றை தியானித்தல், நமதாக்கிக் கொள்ளுதல், சான்று பகர்தல், நமக்கும் நாம் வாழ்கின்ற சமூகத்திற்கும் சான்று பகரும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2024, 12:31