தேடுதல்

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்களின் மாண்பு மதிக்கப்பட செபம்

திருத்தந்தை : ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிநிகரான மாண்பு உள்ளது என்பது உண்மையெனினும், அது நடைமுறையில் காணப்படுவதில்லை என்பதே உண்மை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்களின் மாண்பு மதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டு நிலைகள் அகற்றப்பட இம்மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்வோம் என விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் மாதத்திற்கான இறைவேண்டல் கருத்தை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல பகுதிகளில் இன்று பெண்கள் சமூகத்திலிருந்தே அகற்றப்பட வேண்டியவர்கள் என்பது போலவும், உதவிகளைப் பெறவோ, வியாபாரத்தை துவக்கவோ, கல்வி கற்கச் செல்லவோ அனுமதிக்கப்படாதவர்களாகவும் நடத்தப்படுவதாக அதில் கூறியுள்ளார்.

சில நாடுகளில் அவர்கள் எத்தகைய உடைகளை அணியவேண்டும் என சட்டம் வழியாகவே கட்டாயப்படுத்தப்படுவதாகவும், பல நாடுகளில் பெண்ணுறுப்பு சிதைத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் ஏப்ரல் மாத இறைவேண்டல் கருத்தில் தன் கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

பெண்களின் குரலை அடக்காதிருப்போம், உரிமை மீறப்பட்ட பெண்களின் குரலை திருடாதிருப்போம், இவர்கள் சுரண்டப்படுகிறாரகள், மற்றும் சமூகத்தின் விளிம்புக்கு ஓரந்தள்ளப்படுகிறார்கள் எனக்கூறும் திருத்தந்தை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிநிகரான மாண்பு உள்ளது என்பது உண்மையெனினும் அது நடைமுறையில் காணப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.

பாகுபாட்டுச் சட்டங்களை முற்றிலுமாக ஒழித்து, பெண்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கான உறுதிப்பாட்டை அனைத்து அரசுகளும் எடுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களின் மாண்பையும் உரிமைகளையும் மதிப்பதன் வழியாகவே ஒரு நாடு தன் வளர்ச்சியைக் காண முடியும் எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பெண்களின் மாண்பும் உரிமைகளும் மதிக்கப்பட இறைவேண்டல் செய்ய அனைவருக்கும் அழைப்புவிடுத்து தன் ஏப்ரல் மாத இறைவேண்டல் கருத்து விளக்கத்தை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2024, 14:34