தேடுதல்

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பெண் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பெண்  (AFP or licensors)

சமூகங்களில் ஊக்க காரணிகளாக செயல்படுகிறார்கள் பெண்கள்

நிலைத்த வளர்ச்சிக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், நிலத்திற்கே உரிய மதிப்புடன் விவசாயத்தை மேற்கொண்டுவருவோர்க்கு நன்றியையும் வெளியிடுவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

World Rural Forum என அழைக்கப்படும் உலக கிராமப்புற மன்றத்தின் 8வது உலகக் கூட்டத்திற்கு தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 19 செவ்வாய்க்கிழமை முதல் 21 வியாழன் வரை இஸ்பெயினில் இடம்பெறும் இவ்வுலகக் கருத்தரங்கினை நடத்திவரும் உலக கிராமப்புற மன்றத்தின் தலைவர்  Martín Uriarte Zugazabeitia அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி, இப்பூமியின் நிலைத்த வளர்ச்சிக்கு குடும்ப விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன், விவசாயிகளின் குடும்பம் நிலத்திற்கே உரிய மதிப்புடன் விவசாயத்தை மேற்கொண்டுவருவது குறித்து திருத்தந்தையின் நன்றியையும் வெளியிட்டுள்ளது.

உலகுக்கு உணவு வழங்கும் விவசாயிகள் ஏழ்மையில் வாடிவருவது குறித்து தன் கவலையை வெளியிடும் திருத்தந்தை, சிறு விவசாயிகளின் குடும்பங்களோடு திருஅவை தன் நெருக்கத்தையும், ஊக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாகவும் தன் செய்தியில் கூறியுள்ளார்.

விவசாய உலகிலும், பொருளாதார வளர்ச்சியிலும் கிராமப்புறப் பெண்களின் பங்களிப்பு குறித்து தன் செய்தியில் பாராட்டுக்களை வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாங்கள் வாழும் சமூகங்களில் மிகப்பெரும் ஊக்க காரணிகளாக பெண்கள் செயல்படுகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்துப் பாராட்டியுள்ளார்.

மாற்றங்களுக்குத் தடைவிதிக்காமல், தொலைதூர நோக்குடன் பழையப் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளைக் கொணரும் இளைய தலைமுறைக்கும் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தகைய கருத்தரங்குகள், கூட்டங்கள் வழியாக, கிராமப்புறக் குடும்பங்களின் இடம் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பசியை ஒழித்தல், சரிநிகரற்றத் தன்மையை குறைத்தல், நம் உலகின் மீது அக்கறைக் காட்டுதல் ஆகியவைகளில் முன்னேற்றம் காண்போமாக என தன் வாழ்த்துச் செய்தியை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2024, 16:04