தேடுதல்

30 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அருள்பணி ஜுசெப்பே தியானா 30 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அருள்பணி ஜுசெப்பே தியானா 

அருள்பணி தியானா அவர்கள் படுகொலைச் செய்யப்பட்டதன் 30ஆம் ஆண்டு

தன் சகோதரர்களில் இறைத்தந்தையின் முகத்தைக் கண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் நீதியிலும், அமைதியிலும், சுதந்திரத்திலும் வாழ உழைத்து தன்னையேக் கையளித்தவர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் மக்களுக்கானச் சேவையில் தன் உயிரையே ஈந்த இத்தாலியின் தென்பகுதி அருள்பணி Giuseppe Diana அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு குறித்து அவர் பணியாற்றிய Aversa மறைமாவட்ட ஆயருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவெர்சா ஆயர் ஆஞ்சலோ ஸ்பினில்லோ அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள கடிதத்தில், 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி காலையில் தென் இத்தாலியின் Casal di Principe பங்குதள குருவாக இருந்த ஜுசெப்பே தியானா அவர்கள் படுகொலைச் செய்யப்பட்டதன் 30ஆம் ஆண்டு நினைவு நாளில் இத்தகைய ஒரு நல்ல மேய்ப்பரைத் தந்ததற்காக இறைவனுக்கு நாம் அனைவரும் நன்றியுரைப்போம் என கேட்டுள்ளார்.

அனைத்துவிதமான குற்றச் செயல்களையும் தீமைகளையும் தவிர்த்து ஒரு புதிய உலகை கட்டியெழுப்ப நாமனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என அக்கடிதத்தில் அழைப்புவிடும் திருத்தந்தை பிரான்சிஸ், அருள்பணி தியானாவின் மேய்ப்புப்பணிகளை தொடர்ந்து ஆற்றிவரும் அமைப்புக்களுக்கும் குழுக்களுக்கும் தன் நன்றியை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அன்று காயீனுக்கும் ஆபேலுக்கும் இடையே இடம்பெற்ற சகோதர கொலை இன்றும் தொடர்கிறது என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை, மனிதர்களிடையே இடம்பெறும் இத்தகைய வன்முறைச் செயல்களால் பல வேளைகளில் நம் தெருக்களில் இரத்த ஆறு ஓடுகின்றது என்பதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தன் குருத்துவத்தால் தூண்டப்பட்ட அருள்பணி தியானா அவர்கள், தன் சகோதரர்களில் இறைத்தந்தையின் முகத்தைக் கண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் நீதியிலும் அமைதியிலும் சுதந்திரத்திலும் வாழ உழைத்து தன்னையேக் கையளித்தவர் என அவரை பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

30 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலைச் செய்ய்யப்பட்ட அருள்பணி தியானாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி இளையோர், நீதியும் உண்மையும் நிறைந்த உலகைக் கட்டியெழுப்ப முயல்வதுடன், விசுவாசத்தையும், இறையுண்மையில் நம்பிக்கையையும் பலப்படுத்தவும் முன்வரவேண்டும் என அழைப்புவிடுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் ஒருநாளும் தங்கள் நம்பிக்கைகள் திருடப்பட அனுமதிக்காமல், நல்லதொரு வருங்காலத்தை கட்டியமைக்க முன்வர வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2024, 16:13