தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

உலக ஆயர் மாமன்ற அமர்வுக்கு திருத்தந்தையின் பரிந்துரைகள்

மறைப்பணியில் எவ்வாறு ஒன்றிணைந்து நடைபோடும் திருஅவையாகச் செயல்படுவது என்பதை அடிப்படையாகக் கொண்டு திருத்தந்தை 10 பரிந்துரைகளை விவாதத்திற்கு முன்வைத்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இடம்பெற உள்ள உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாவது அமர்வுக்கு தயாரிப்பாக  விவாதிக்கப்படுவதற்கென 10 கருத்துக்களை முன்வைத்து உலக ஆயர் மாமன்றத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக ஆயர் மாமன்ற பொதுச்செயலகத்தின் பொதுச்செயலர் கர்தினால் Mario Grech அவர்களுக்கு திருத்தந்தையால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற, 16வது வழமையான பொதுஅவைக் கூட்டத்தின் முதல் அமர்வின் இறுதி அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த 10 விவாதத்திற்குரிய  கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டு இடம்பெற்ற அமர்வில் வெளிவந்த பல இறையியல் தொடர்புடைய கேள்விகள் மிகவும் ஆழமாக ஆராயப்பட வேண்டியுள்ளதால் இவ்வாண்டின் இரண்டாவது அமர்வுக்கு முன் விவாதிக்கப்படுவதற்கென இந்த பத்து பரிந்துரைகளை முன்வைப்பதாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 2 முதல் 27 வரை இடம்பெற உள்ள 16வது ஆயர் மாமன்றத்தின் வழமையானக் கூட்டத்தின் இரண்டாவது அமர்வுக்கு தயாரிப்பாக விவாதிப்பதற்கு திருத்தந்தை முன்வைத்துள்ளக் கருத்துக்கள், மறைப்பணியில் எவ்வாறு ஒன்றிணைந்து நடைபோடும் திருஅவையாகச் செயல்படுவது என்பதை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

‘கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கும் இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கும் இடையேயான உறவுகளின் சில கூறுகள்’ என்பதை தன் 10 பரிந்துரைகளில் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஏழைகளின் குரலுக்குச் செவிமடுத்தல், டிஜிட்டல் அதாவது எண்ணிம சுற்றுச்சூழலில் மறைப்பணி, குருத்துவ அழைத்தலின் கொடை(Ratio Fundamentalis Institutionis Sacerdotalis) என்ற தலைப்பிலான ஏட்டை மறைப்பணியில் ஒன்றிணைந்து நடைபோடலின் கண்ணோட்டத்தில் மறுபரிசீலனைச் செய்தல்,  மறைப்பணி சேவை வடிவங்களின் சில இறையியல் மற்றும் திருஅவைச் சட்டக் கூறுகளை ஆய்வு செய்தல் என முதல் ஐந்து கருத்துக்களை தன் கடிதத்தில் முன்வைத்துள்ளார் திருத்தந்தை.

ஏனைய ஐந்து பரிந்துரைக் கருத்துக்களாக, ஆயர்கள், அர்ப்பண வாழ்வு மற்றும் திருஅவை அமைப்புக்களிடையே நிலவும் உறவுகள் குறித்த ஏடுகளை மறைப்பணியில் ஒன்றிணைந்து நடைபோடலின் கண்ணோட்டத்தில் மறு ஆய்வு செய்தல், இதே, மறைப்பணியில் ஒன்றிணைந்து நடைபோடல் கண்ணோட்டத்தில் ஆயர் தேர்வு மற்றும் ஆயர் பணிகள் குறித்து விவாதித்தல், இதே கண்ணோட்டத்தில் பாப்பிறைப் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறித்து ஆய்வுச் செய்தல், திருஅவைக் கோட்பாட்டு, மறைப்பணி மற்றும் ஒழுக்க ரீதியின்  வாதத்துக்கிடமான விடயங்களில் இறையியல் மற்றும் இணைந்து நடைபோடுதலின் துணையுடன் தேர்ந்து தெளிதல், கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தின் கனிகளை திருஅவை நடவடிக்கைகளில் வரவேற்றல் என தன் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2024, 15:21