தேடுதல்

மால்டா அதிபருடன் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ் மால்டா அதிபருடன் உரையாடும் திருத்தந்தை பிரான்சிஸ்   (VATICAN MEDIA Divisione Foto)

மால்டா அதிபருடன் திருத்தந்தை சந்திப்பு

திருத்தந்தைக்கும் மால்டா அதிபருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு திருப்பீடத்திற்கும் மால்டா குடியரசிற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது : திருப்பீடச் செய்தித் தொடர்பகம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மால்டா அதிபர் ஜார்ஜ் வெல்லா அவர்களை மார்ச் 21, இவ்வியாழனன்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

இவ்விருவரின் சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தததாகவும், அந்தச் சந்திப்பின் இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் கூறும் அச்செய்திக் குறிப்பு, திருத்தந்தை மால்டா அதிபருக்கு "தலைமுறைகளுக்கிடையேயான உரையாடல்" என்ற தலைப்பில் ஒரு வெண்கல சிற்பத்தையும், திருஅவை படிப்பினைகள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் வழங்கினார் என்றும் தெரிவிக்கிறது.

அதேவேளையில், மால்டா அதிபர், புனித பேதுரு சதுக்கத்தில் நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இரக்கத்தின் அன்னை மருத்துவ மையத்திற்கு சில உதவிகளை வழங்கினார் என்றும் உரைக்கிறது அச்செய்தி.  

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, மால்டா அரசுத் தலைவர், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் மற்றும், மாநிலங்களுடனான உறவுகளுக்கான துணைச் செயலாளர் பேரருள்தந்தை Wachowski Mirosław Stanisław இருவரையும் சந்தித்தார் என்றும் திருபீடச் செய்தித் தொடர்பகத்தின் செய்திக் குறிப்பு உரைத்துள்ளது.

இந்தச் சந்திப்புகளின்போது, மத்தியதரைக் கடல் பகுதி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் மற்றும் உக்ரைனில் நிலவி வரும் மோதல்கள் மற்றும் இடம்பெயர்வு மற்றும் அனைத்துலகவில் காணப்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். கடந்த 2022-ஆம் ஆண்டு, ஏப்ரல் 2-3,தேதிகளில் மால்டாவிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அதன் தலைநகர் Valletta, Rabat, Floriana,மற்றும் Gozo தீவிற்கும் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2024, 14:45