தேடுதல்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகள்   (AFP or licensors)

கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கொண்டவர்களுக்கு வாக்களியுங்கள்!

எதிர்வரும் தேர்தலில் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, கத்தோலிக்கர்கள் மற்றும் பிற ஐரோப்பிய குடிமக்கள் யாவரும் பொறுப்புடன் வாக்களிக்குமாறு ஐரோப்பிய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு வாக்களிக்க ஐரோப்பிய மக்கள் தயாராகி வரும் வேளை, கிறிஸ்தவ விழுமியங்களையும் ஐரோப்பியத் திட்டங்களையும் நிலைநிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு குடிமக்களுக்கு அறிக்கையொன்றில் அழைப்பு விடுத்துள்ளனர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர்கள்.

இன்று, ஐரோப்பாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சவாலான மற்றும் நிச்சயமற்ற காலங்களை கடந்து செல்லும் வேளையில், இக்கண்டம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க, பொதுநலனை நேர்மையாகப் பின்பற்றும் வலிமைவாய்ந்த, திறமையான மற்றும் மதிப்புமிக்க கொள்கை வகுப்பாளர்கள் நமக்குத் தேவை என்று கூறியுள்ள ஆயர்கள், எதிர்வரும் தேர்தலில் அப்படிப்பட்டவர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த முக்கியமான தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நன்கு தெளிந்து தேர்வுசெய்ய வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என்பதையும் அந்த அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளனர் ஆயர்கள். 

ஒவ்வொரு மனிதரின் மாண்பு, ஒற்றுமை, சமத்துவம், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் புனிதம், மக்களாட்சி, சுதந்திரம், துணை செயல்பாடு மற்றும் நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின்மீதான அக்கறை இவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வெவ்வேறு சூழ்நிலைகளை உணர்ந்தவர்களாய், ஐரோப்பிய திட்டத்தை தெளிவாக ஆதரிக்கும் நபர்கள் மற்றும் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை ஆயர்கள் அவ்வறிக்கையில் எடுத்துரைத்துள்ளனர்.

இச்சூழலில், இவ்வறிக்கை மற்றும் ஜூன் மாதம் நிகழவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பற்றியும், வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில்,  சிறப்பாக விளக்கியுள்ளார் COMECE எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருள்பணியாளர் Manuel Enrique Barrios Prieto.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2024, 14:45